Saturday, March 12, 2022

திருமுறை மந்திரங்கள்

 எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்தார். வீட்டு உரிமையாளர் மிகவும் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். திருமுறை ஓதி இறைவனை வணங்கச் சொன்னேன். தேவாரம் பாடத் தெரியாதே என்றார். பாடமுடியவில்லையென்றால் கேளுங்கள் என்றேன். youtube ஒளிக்காட்சியில் ஓதுவார் ஓதுவதைக் கேட்டார். தோடுடைய செவியன் என்ற ஞானசம்பந்தர் பாடலைக் கேட்டபடி தானும் கூடச் சேர்ந்து பாடினார். மறுமாதமே வேறு நல்ல வாடகை வீட்டிற்குக் குடிபோனார். வெகுநாளாகத் திருமணம் ஆகாமல் இருந்த அவருக்குத் திருமணமும் நிச்சயமானது.

 இனொருவர், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமான ஒருவர். சிறுவயது முதல் திருமுறை பாடி வருபவர். அவர், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும்போது, நல்ல வேலை கிடைக்கவேண்டுமென சிவபெருமானை வேண்டித் திருமுறை பாடி வணங்கினார். பத்து பேர் கலந்துகொண்ட நேர்முகத் தேர்வில் அவருக்கே வெற்றி கிட்டியது. அன்றிலிருந்து முன்னேற்றம்தான். இப்போது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், அவர் பெரும் பணக்காராகவும் குடும்பத் தலைவராகவும், சமூகத்தில் பலரால் அறியப்படும் ஒருவராகவும் விளங்குகிறார். இப்போதும் தினமும் திருமுறை பாடுவதாகக் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். 
 ஆம், சமுதாயத்தில் எல்லா நிலைகளில் உள்ளோரும் திருமுறை பாடிப் பயனடையலாம். திருமுறைப் பதிகங்கள் எல்லாமே மந்திரங்கள் ஆகும். ஏனென்றால், திருமுறைகள், இறைவன் அருள் பெற்ற உயர் ஆன்மாக்களால் பாடப்பெற்றவை. இது இவ்வாறு நடக்கட்டும் என்று அவர்கள் ஆணையிட்டால் அது நடக்கும், அவர்களது ஆசிகள் பலிக்கும். அத்தகைய அவர்களின் ஆற்றல் அவர்களின் வாக்கிலும் பொதிந்திருக்கும். அதனால், அவர்கள் நிறைமொழி மாந்தர் எனப்படுவர். அதனையே தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்: “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 
மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்யுளியல்) என்பது தொல்காப்பிய நூற்பா.
 இந்த நூற்பாவை ஒட்டித்தான் திருவள்ளுவர் கூறினார்:
  “நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்” (திருக்குறள் 28) 
 ஆகவே, தமிழ் மந்திரங்களாம் திருமுறைகள் நமக்கு நல்ல பலன் தருபவை. செல்வம் சேரவும், உடல் நலம் பெறவும், திருமணம் நடக்கவும், இன்ன பிற பலன்கள் கிட்டவும் உதவக்கூடிய மந்திரங்கள் பற்றி ஒரு காணொளியில் தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். 

அதனைஇந்த இணைப்பில் காண்க. https://youtu.be/v11CSyq6XZU 

அவரவருக்கு வேண்டிய மந்திரப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிப் பயன்பெறுக. 
 முக்கிய குறிப்பு
முறையாக ஓதுவாரிடம் பயிற்சி பெற்றுப் பாடுவதே சாலச் சிறந்tதது. அவ்வாறு செய்ய முடியாத நிலையில்தான் மாற்று வழியை நாடவேண்டும். 
 நன்றி. சிவ சிவ.

No comments:

Post a Comment

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...