Saturday, March 12, 2022

திருமுறை மந்திரங்கள்

 எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்தார். வீட்டு உரிமையாளர் மிகவும் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். திருமுறை ஓதி இறைவனை வணங்கச் சொன்னேன். தேவாரம் பாடத் தெரியாதே என்றார். பாடமுடியவில்லையென்றால் கேளுங்கள் என்றேன். youtube ஒளிக்காட்சியில் ஓதுவார் ஓதுவதைக் கேட்டார். தோடுடைய செவியன் என்ற ஞானசம்பந்தர் பாடலைக் கேட்டபடி தானும் கூடச் சேர்ந்து பாடினார். மறுமாதமே வேறு நல்ல வாடகை வீட்டிற்குக் குடிபோனார். வெகுநாளாகத் திருமணம் ஆகாமல் இருந்த அவருக்குத் திருமணமும் நிச்சயமானது.

 இனொருவர், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமான ஒருவர். சிறுவயது முதல் திருமுறை பாடி வருபவர். அவர், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும்போது, நல்ல வேலை கிடைக்கவேண்டுமென சிவபெருமானை வேண்டித் திருமுறை பாடி வணங்கினார். பத்து பேர் கலந்துகொண்ட நேர்முகத் தேர்வில் அவருக்கே வெற்றி கிட்டியது. அன்றிலிருந்து முன்னேற்றம்தான். இப்போது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், அவர் பெரும் பணக்காராகவும் குடும்பத் தலைவராகவும், சமூகத்தில் பலரால் அறியப்படும் ஒருவராகவும் விளங்குகிறார். இப்போதும் தினமும் திருமுறை பாடுவதாகக் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். 
 ஆம், சமுதாயத்தில் எல்லா நிலைகளில் உள்ளோரும் திருமுறை பாடிப் பயனடையலாம். திருமுறைப் பதிகங்கள் எல்லாமே மந்திரங்கள் ஆகும். ஏனென்றால், திருமுறைகள், இறைவன் அருள் பெற்ற உயர் ஆன்மாக்களால் பாடப்பெற்றவை. இது இவ்வாறு நடக்கட்டும் என்று அவர்கள் ஆணையிட்டால் அது நடக்கும், அவர்களது ஆசிகள் பலிக்கும். அத்தகைய அவர்களின் ஆற்றல் அவர்களின் வாக்கிலும் பொதிந்திருக்கும். அதனால், அவர்கள் நிறைமொழி மாந்தர் எனப்படுவர். அதனையே தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்: “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 
மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்யுளியல்) என்பது தொல்காப்பிய நூற்பா.
 இந்த நூற்பாவை ஒட்டித்தான் திருவள்ளுவர் கூறினார்:
  “நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்” (திருக்குறள் 28) 
 ஆகவே, தமிழ் மந்திரங்களாம் திருமுறைகள் நமக்கு நல்ல பலன் தருபவை. செல்வம் சேரவும், உடல் நலம் பெறவும், திருமணம் நடக்கவும், இன்ன பிற பலன்கள் கிட்டவும் உதவக்கூடிய மந்திரங்கள் பற்றி ஒரு காணொளியில் தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். 

அதனைஇந்த இணைப்பில் காண்க. https://youtu.be/v11CSyq6XZU 

அவரவருக்கு வேண்டிய மந்திரப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிப் பயன்பெறுக. 
 முக்கிய குறிப்பு
முறையாக ஓதுவாரிடம் பயிற்சி பெற்றுப் பாடுவதே சாலச் சிறந்tதது. அவ்வாறு செய்ய முடியாத நிலையில்தான் மாற்று வழியை நாடவேண்டும். 
 நன்றி. சிவ சிவ.

Friday, March 11, 2022

பாவமும் பழிச்சொல்லும் நீங்க வேண்டுமா?

நீங்கள் எல்லாரும் பாவிகள், (sinners)  என்று ஒருவன் இன்னொருவனிடம் சொன்னானாம்.  

அதற்கு மற்றவன் சொன்ன பதில்:

“ ஆமாம், எல்லாரும் பாவிகள், அதிலும், என்னைப்  பாவி என்று சொல்லும்  நீதான் மிகப் பெரிய பாவி,  படுபாவி.” என்று திட்டினானாம்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டால் பாவம் தீருமா? தீராது. முந்திய பிறவியில் செய்த வினைகளின் பயனாகத்தான் மீண்டும் பிறவி எடுத்துப் பிறந்திருக்கிறோம். இந்தப் பிறவியில் மேலும் பாவம் சேர்க்காமல் இருப்பதுதான் அறிவுடைமை, அல்லவா?

ஒருவர், அல்லது ஓர் உயிர், பாவம் செய்தால்தான் அதற்குப் பிறவி ஏற்படும் என்றில்லை. நல்ல வினைகள் செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் மனிதப் பிறவி கிட்டுவது உண்டு. அவர்கள் பூமிக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு நன்மை செய்து நல்வழி காட்டி மேல் நிலைக்கு உயர்த்துவதுதான். எடுத்துக்காட்டாகத் திருஞான சம்பந்தரையும் மற்ற பல நாயன்மாரையும் கூறலாம்.

பெரும்பாலும் மனிதராகப் பிறப்பவர் அத்தனை பேருக்குமே புண்ணியம், பாவம் இரண்டுமே வாழ்வில் இருக்கும்; ஆனால் வெவ்வேறு விகிதத்தில் கலந்திருக்கும்.  பாவங்களுக்காகத் துன்பம் அனுபவிக்கும் அதே வேளையில் புண்ணியங்களினால் கிடைத்த இன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் மக்கள். ஆகவே, சும்மா பாவிகள் என்று திட்டுவது தவறு, நல்வினை, தீவினை இரண்டையும் கலந்து அனுபவிக்கப் பிறந்திருக்கும் ஆன்மா என்று சொல்லலாம்.

பூமியில் வாழும்போது தங்கள் பாவக் கணக்கை விரைவாக முடித்துவிட்டு, புண்ணியங்களை மட்டும் அதிகரிக்க விரும்புவோர் என்ன செய்யலாம்? முடிந்தவரை நேர்மையாக இருக்கலாம். தான தர்மங்கள், சேவைகள் போன்றவற்றின் மூலம் அதிக புண்ணியங்களைச் சேர்க்கலாம்.

இவற்றைத் தாண்டி நாம் செய்யக்கூடிய முக்கியமான செயல் ஒன்று உண்டு. அது, இறைவனை வணங்குவதாகும். நம் தமிழ் ஆன்மீகம் காட்டும் வழிமுறை அதுவே.

எடுத்துக்காட்டுக்கு ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி நாயனார் மிக அழகாகச் சொல்லியிருப்பதைச் சிந்திப்போம்.

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே

நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே

சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்

கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.(7.81)

இந்த மந்திரப் பாடலின் பொருள்:

உலக மக்களே, தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே ; அங்குச் செல்லுங்கள். மற்ற உயிர்களுக்குத் துன்பம் தந்து நீங்கள் சேர்த்து வைத்த பாவங்களை நீக்க முயலுங்கள். உங்கள் பாவங்கள் காரணமாக, உங்களைப் பார்த்துப் பலரும் பல இகழுரைகளைச் சொல்லுவார்கள். அவ்வாறு இழிவுபட்டுத் துன்புறச் செய்யும் உங்கள் பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்காகப் பலமுறை சென்று வணங்குங்கள்.

சிந்தனை:

திருக்கழுக்குன்றம் தமிழ் நாட்டில் உள்ளதே, நாம் பலமுறை எப்படிச் செல்வது என்று கவலைப்படவேண்டாம்.

இப்பாடலை மனத்தாலோ வாயாலோ பாடி, கழுக்குன்றக் கோவிலில் வீற்றிருந்து அருள்புரியும் சிவபெருமானை மனத்துக்குள் எண்ணி வேண்டினால் போதும். நம் பாவங்கள் அனைத்தும் மறையத் தொடங்கும்.  அதனை வாழ்வில் நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள் பலர் உண்டு.

மேலும், நம்மைத் தாக்கிப் பேசும் எதிரிகளைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்பதையும் இந்த மந்திரப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

நாம் செய்த தீய வினைகளின் காரணமாக, பிறர் இகழ்ந்து பேசுவதைக் கேட்டுத் துன்புற நேற்கிறது. அவ்வாறு இருக்கையில் அந்த எதிரிகளைப் பழி வாங்குவதால் பெரிய முன்னேற்றம் வராது. மாறாக, வினைகளை நீக்க உதவும் சிவபெருமானை வணங்கினால், புறம் பேசிய அதே எதிரி உங்களைப் புகழ்ந்து பேசும் வண்ணம் சூழ்நிலை மாறும்.

ஆகவே, பக்திக்கு முதலிடம் தருவோம். பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ள வழிகாண்போம்.

ஓம் நம சிவாய. !


Wednesday, March 09, 2022

பல லோகங்கள்

இறைவன் ஒருவனே. அவன் இருவித அருள் வழங்குகிறான். மூன்று வித வடிவங்கள் கொள்கிறான். முக்காலமும் செயல்படுகிறான். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துகிறான். இதனை விளக்கும் திருமந்திரப் பாடல், இறைவன் ஏழு உலகையும் தாண்டியவன் என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். உயிர் உலகை விட்டு நீங்கியதும் எங்குச் செல்கிறது? அதாவது, ஒரு மனிதரோ விலங்கோ வேறு எந்த உயிரினமோ மரணமடைந்ததும் அந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து எங்குச் செல்கிறது? சொர்க்கம் அல்லது நரகம் என்று இரண்டையே பொதுவாகப் பலர் கூறுவர். உண்மையில் இந்த இரண்டினையும் தாண்டி வேறு பல உலகங்கள் உள்ளன. அவற்றில் வசித்து வந்த தேவர்கள், ஞானியர் போன்றோரும் இந்த மண்ணுலகுக்கு இறங்கி வந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே மேல் உலகம் பற்றிய குறிப்புகள் மனிதருக்குக் கிடைத்தன. இறைவனின் அருளால் நல்ல ஞானம் மனிதர்க்குக் கிட்ட அவர்கள் உதவினர். திருமூலர் அத்தகைய ஓர் இறைத்தூதர் ஆவார்.அவர் வழங்கிய திருமந்திரத்திலிருந்து ஒரு பாடல்: >ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. (திருமந்திரம் பாடல் 1) > எல்லா உலகங்களுக்கும் மேலான உலகமாகிய சிவலோகத்திலிருந்து வந்தவர் திருமூலர். அவர் வாக்கு இறைவன் நமக்களித்த அருட்கொடையாகும். தமிழ் மூவாயிரம் எனப் பெயர்பெற்ற திருமந்திரத்தைப் படித்துணர்ந்து வெவ்வேறு உலகங்கள் பற்றித் தெளியலாம். ௐம் நம சிவாய. பின் குறிப்பு: தொடர்புடைய எனது ஒளிக்காட்சியைப் பார்க்கவும். இணைப்பு: https://www.youtube.com/watch?v=r5apJT6R6eQ நன்றி.

Tuesday, March 08, 2022

இறைவன் நம்மை நன்றாகப் படைத்துள்ளான். ஓம் நமசிவாய.



என்னை நன்றாக இறைவன் படைத்தனன் (திருமந்திரம்)

(கட்டுரை: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்)

14.1.2022 தை 1, திருவள்ளுவர் ஆண்டு 2053

 

முன்னுரை:

3000 ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் சித்தர் அருளிய திருமந்திரம், 10-ஆம் திருமுறை. அதன் சிறந்த வரிகளில் ஒன்றுதான் இக்கட்டுரையின் தலைப்பு.  இறைவன் நம்மைப் படைத்தான்ன். அவனது படைப்பு குறித்துச் சைவ சித்தாந்தம் சொல்வதென்ன? அதனை ஆராயும் முன் சில முக்கிய குறிப்புகள்:

தமிழர்க்குச் சமயம் ஆதிமுதலே உண்டு. அதுவே சைவம்.

சிந்துவெளி ஆராய்ச்சி கூறும் உண்மை இது!,  தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும் தொன்மையான தமிழர் வழிபாட்டுச் சிவலிங்கங்களும் நமக்குக் கூறும் உண்மை.

சைவ சமயம் தோன்றிய காலத்தை நாம் அறிய மாட்டோம். ஆனால் சைவ மீட்புக் காலத்தை அறிவோம். அது நாயன்மார் காலம். அவர்களால் நமக்குக் கிடைத்தன, திருமுறைகள். தொன்றுதொட்டு தமிழர் கொண்டிருந்த சமய அறிவு அவற்றில் வெளிப்படுகின்றன. காலங்காலமாக அறியப்பட்ட ஆன்மீக உண்மைகளை வழக்கொழியவிடாமல் பதிவு செய்ய வந்தவை 14 சித்தாந்த சாத்திரங்கள்

எனவே, திருமுறைகள் தமிழரின் ஆதி ஆன்மீக நம்பிக்கையைப் பதிவு செய்கின்றன. மெய்கண்ட சாத்திரங்கள் தமிழரின் ஆதி ஆன்மீக ஞானத்தைப் பதிவு செய்கின்றன.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்பது திருமூலர் வாக்கு. அதனையே விரிவாகச் சொல்லி, எல்லா உயிர்களுக்கும் காரணத்தோடு கூடிய பிறவியை எவ்வாறு வகுத்துப் படைக்கிறான் சிவபெருமான் என்று விளக்குபவை சித்தாந்த சாத்திரங்கள்

 

இறைவன் படைப்பு:

ஐம்பூதங்களால் ஆன உடலை, இன்ன இடத்தில் பிறந்து தன்னை உணரும்படி செய்பவன் இறைவன்.

மாயையிலிருந்து தனு கரண புவன போகங்களைத் தந்தார் இறைவன்.

கன்மம் என்ற வினையைச் சேர்த்தார், அதனால் உயிர் செயல்படத் தொடங்கியது. செயல்படும்போது மெதுமெதுவாக உயிருக்கு அறிவு ஏற்படும்.

உயிருக்கு உயிராக உடன் இருந்து வித்தியா தத்துவங்களில் கலையைத் தூண்டி, உயிரை மறைத்திருக்கிற ஆணவத்தைச் சற்றே விலக்கினார். அதே கலையினால் உயிரின் செயல் ஆற்றலைத் தூண்டினார்.

அடுத்து வித்தை என்ற தத்துவத்தைக் கொண்டு, அறிவு ஆற்றலைத் தூண்டினான். அராகம் என்ற தத்துவத்தைக் கொண்டுஉயிரின் விருப்பு ஆற்றலைத் தூண்டினான்.

உடன் வாக்குகளைச் சேர்த்தான். வாக்குகளே மொழியின் ஆதாரம். சொல்லின் வழியே அறிவு தோன்றுகிறது.

பின் உயிர்க்கு உயிராகத் திருவருளாக உடன் கலந்து நின்றான்; உயிர் அறியும்போது அறிவித்தான்.

ஆணவம் முற்றாக நீங்கும்போது முக்தி என்னும் பேரின்பத்தைத் தருபவன் சிவபெருமானே.

மோட்ச தீபம் என்பது அதன் அடையாளம். சிவலிங்கம் எனும் சதாசிவமே முத்திக்கு வழிகாட்டும் அடையாளம்.

இச்சா, கிரியா ஞானா சக்திகள் = விருப்பாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல்.

குறிப்பு: சக்தி என்பது சிவபெருமானின் திருவருளே ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை. சக்தி இல்லாமல் சிவம் சொரூப நிலையில் இருப்பார்.

ஆற்றல் நிலையில் திருவருள் கொண்டுதான் இறைவன் ஐந்தொழில்களைச் செய்கின்றார்.

முற்றழிப்புக்குப் பின்னர் அனைத்தும் திருவருளில் தங்கும்அந்தத் திருவருள் / சக்தி/ஆற்றல்  சிவத்தில் ஒடுங்கியிருக்கும்

வெறுமனே உண்டாகுக என இறைவன் கூறியதாகச் சித்தாந்தம் சொல்லவில்லை. எதிலிருந்து எது உண்டானது, ஏன், எவ்வாறு உண்டானது போன்ற அனைத்தையும் விளக்குவது சைவம்.

சிவபெருமான் நிமித்த காரணம்.

மாயை முதற்காரணம்

திருவருள் துணைக்காரணம்

இப்படி விரிவாக விளக்கும் சித்தாந்தக் கருத்துதான் திருமந்திரத்திலும் உள்ளது.

 

 

சிவன் நம்மை நன்றாகப் படைத்தான் என்பதனை என்றும் நினைவில் கொள்க.

படைப்புக்குக் காரணம் உண்டு. நம் பிறப்புக்கும் காரணம் உண்டு.

அனைத்தும் இன்ப மயமானது.

சிவபெருமானை எண்குணத்தான் என்று திருவள்ளுவரும் நாயன்மாரும்  கூறுவார்.

எட்டுக் குணங்களில் ஒன்று இன்ப வடிவாகும்.

இறைவன் இன்பத்தை அளிக்கவே நம் பிறப்பை இங்கு அளித்துள்ளான்.

இதனை அறிந்துதான் தமிழர் ஆதி முதல் சிவன் கோவிலை வைத்தும் சிவலிங்கத்தை வணங்கியும் இனிய வாழ்வு வாழ்ந்தனர்.

 

இங்கு நமக்குத் தோன்றவேண்டிய சிந்தனை: உயிர்கள் அனாதி. அவற்றுக்கு உடலும் அனுபவமும் தரும் இறைவன் இன்ப வடிவினன், மற்றும் அளவற்ற அருளாளன் எனும்போது, படைப்பின் நோக்கம் என்னவாக இருக்கும்?

இக்கேள்விக்குப் பதிலளித்து, நமக்கு வழிகாட்டும் விளக்கங்களை நாயன்மார் கூறியுள்ளனர்:

1)   நன்று நாள்தொறும் நம்வினை போயறும்

   என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடை யானைத் தொழுமினே.  (அப்பர் தேவாரம்)

கருத்து: சிவனை வழிபட்டு வந்தால் குறையொன்றும் இல்லாத இன்ப வாழ்வு வாழலாம்.

இதற்கு நாயன்மார் வரலாறே சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். துன்பம் என நாம் கருதுவது யாவுமே துன்பம் அன்று. அவை யாவும் நம் பிறவிக்கென அளிக்கப்பட்ட அனுபவங்கள். அவற்றை எளிதில் கடந்து வருவதற்குரிய பலத்தையும் மனத்தெளிவையும் வாய்ப்புகளையும்கூட சிவபெருமானே தருவார்.

திருநாவுக்கரசர் காணாத சோதனைகளா? பிற சமயத்தில் சார்ந்து தெளிவில்லா நிலையை அனுபவித்து, பின் சூலை நோய்க்கு ஆளாகி, அதன் பின் சமணர்களின் சூழ்ச்சியால் அரசனிடம் பல்வேறு தண்டனைகள் அடைந்து துன்புற்றார். ஆனால், அத்தனையையும் கடந்து வென்றார். ஏனெனில், அவருக்குத் தெரியும், சிவபெருமானை வணங்கினால் அவர் தம் கூடவே இருந்து அனைத்தையும் வெல்ல உதவுவார் என்று. அதனால்தான் அவர்என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் என்றார். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்றார்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை (அப்பர்)

ஆம், எந்நாளும் நமக்குத் துன்பம் கிடையாது. இறைவன் நம் கூடவே வரும்போது துன்பம் எப்படி வரும்?

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே. (சம்பந்தர் தேவாரம்)

தானாய், வேறாய், உடனாய் வருபவன் சிவபெருமான் என உணர்ந்து பாடியுள்ளார் சம்பந்தர்.

இறைவன் உயிருக்குள் ஒன்றி நிற்கும் கலப்பினால், ஒன்றாக விளங்குகிறான். இறைத்தன்மை நம்மிடமும் ஓர் அளவு உள்ளது. அதனை உணர்ந்து நாம் நற்சிந்தனை கொள்ளவேண்டும்.

அதே சமயம் நானே கடவுள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. மனிதன் கடவுள் ஆக முடியாது. ஓரளவு உயர் சக்தி பெற்றோர் தெய்வ நிலையை அடையலாம்ஏனெனில், உயிரின் உள் இருக்கும் இறைவனை, உடல் சார்ந்த அனுபவங்கள் பாதிப்பதில்லை. உடலோடு இயங்கும் உயிரை மட்டும்தான் பாதிக்கின்றன. ஆகவே உயிர்கள் வேறு இறைவன் வேறு. தெய்வ சக்தி படைத்த எவரும் மண்ணுலகின் பிறந்து வளர்ந்தால் அவர் கடவுள் ஆக முடியவே முடியாது என்பதை மெய்கண்ட சாத்திரங்கள் வெகு தெளிவாக விளக்கியுள்ளன.

இன்ப-துன்பங்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் அந்தந்த  உடலில் வாழும் உயிர்களுக்கு இன்ப-துன்ப உணர்வுகள் தந்து பாதிப்பை உருவாக்கி, உயிர்களின் அறியாமையைச் சிறிது விலக்கும்; உயிர்களுடன் உறையும் இறைவனோ இன்ப-துன்ப உணர்வின்றி இருப்பான்; இதையே, திருவாசகம்-சிவபுராணத்தில், 'இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!' என்கிறார் மாணிக்கவாசகர்.

 

 

 

ஆகவே நம் உயிருக்குள் இருக்கும் இறைவன், தான் வேறு என்றாலும் நமக்குத் துணையாக உடன் இருந்து நம் வாழ்வைச் செலுத்த உதவுகிறான் என்பதை அறிவோமாக!

இதே கருத்தை , சைவ சித்தாந்த முதற் சந்தானக் குரவர் மெய்கண்டார், அழகு தமிழில், "அவையே தானேயாய்" என்று அருளினார்.

இத்தகு சிறப்புமிக்க பிறவி நமக்குக் கிடைத்திருக்கிறது.

 

2) நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை யுமையொருபாக முடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. (சம்பந்தர் தேவாரம்)

கருத்து: சிவபெருமானின் எண்குணங்களில் ஒன்று பாசங்களற்ற தன்மை. அதாவது, பாசம் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களும் இயல்பாகவே இல்லாதவன் இறைவன். ஆகவே அவனிடம் நன்மை மட்டுமே உளது. தீமை எதுவுமே கிடையாது. இந்நிலையில் நன்மையே உருவான அவன் படைத்த படைப்பாகிய நமக்கும் நல்லதே நடக்கும். எக்குறையும் இல்லா நிலையில்தான் இறைவன் நம்மை வைத்திருப்பான். அதற்கு நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். சிவனைச் சிந்திக்க வேண்டும். அதுவே நம் கடமை.

 

3)  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே (திருமூலர்)

அதாவது, நம் உடலுக்குள்ளே ஒரு மந்திரமானது உணர்வு வடிவில் உள்ளது. அதைச் சொன்னால், இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறைபொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும். அப்படி தனக்குத் தலைப்பட்டதால் வந்த இன்பம் இந்த உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று விழைகிறார் திருமூலர். முக்தி என்பது நிரந்தர இன்பம்.

அதனை அடைய சிவபெருமானை வணங்க வேண்டும்.

இப்பிறவியின்போது பூமியில் சீரும் சிறப்புமாக வாழவும் சிவனையே வணங்க வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில் சொர்க்கம் போன்ற வேறு உலகங்களில் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு மறுபிறப்பு கொள்வோம். அந்த சொர்க்கத்தில் இடம் கிடைக்கவும் சிவபெருமானைத்தான் வணங்கவேண்டும்.

இதுவே தமிழ்ச் சமயம் சொல்லும் ஆன்ம இரகசியம்.

எனவே மூன்று நிலைகளையும் அறிக:

 

 

மண்ணுலகில்:

நீரேற வேறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்

போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்

காரேறு கண்டனைத் தொண்டனா ரூரன் கருதிய

சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.    

-    திருமுறை பாடிச் சிவனை வழிபட்டால் துன்பம் வராது என உறுதிபட மொழிகிறார்  சுந்தரமூர்த்தி நாயனார்.

கல்வி, செல்வம், வீரம், குடும்பம், மன நிம்மதி, புகழ் உடல் நலம் அனைத்துக்கும் உறுதி தருவது சிவ சிந்தனையே ஆகும்.

 

மந்தரம்மன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.  (சம்பந்தர் தேவாரம்)

-    எல்லாப் பெரிய பாவமும் மறைந்துவிடும். செல்வம் மல்கும். பாவ மன்னிப்பு வழங்கத் தகுதியுடைய ஈசனை வணங்குங்கள். வாழும் காலத்தில் வறுமையின்றி செல்வத்தோடு வாழுங்கள். சிவநாமம் அனைத்து நன்மைகளும் தரும்.

 

தூயானை சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய

எவ்வுயிர்க்கும் துணையாய்  நின்ற  

தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச்

சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்

வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் 

 அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்

சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார்

தீநெறிக்கே சேர்கின்றாரே       (அப்பர் தேவாரம்)

-    நம் அனைவருக்கும் மட்டுமின்றி உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் துணையாக இருப்பவன் இறைவன். அந்தச் சிவனைத் துணை என உறுதியாக மனத்தால் உணர்ந்தவர்க்கு எல்லா நன்மையும் கிட்டும். வெறுமனே வாயளவில் அஞ்செழுத்தை உச்சரித்தால் சிவனை அணுக முடியாது. இறைவனடி சேர எண்ணாதவர்கள் நிலைமை தீநெறியில் சேர்வதாகும். அதனால் வினைகள் கூடும். இப்பிறப்பில் நம்மை நன்றாகப் படைத்த இறைவனை நாம் நன்றாக வணங்கினால் நலமாக வாழலாம்.

 

நல்வி னைப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே. (3-ஆம் திருமுறை)

 - இறைவன் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் போற்றுங்கள். அது உமக்குப் புகழ் தரும்.

 

பிறைவளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறை வளரும் பொழிற்காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறை வளருந் தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினராகி நீடுலகத்திருப்பாரே (சம்பந்தர்)

-    நெடுநாள் இவ்வுலகில் வாழ விரும்புவோர் இங்கு நம்மை அனுப்பிவத்த இறைவனிடம் விண்ணப்பித்தால் நீடு வாழலாம்.

 

விண்ணுலகில்:

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

 

ஆக, சிவனடியார்களை எந்தக் கிரகக் கோளாறும் தாக்காது. மலைபோல் வரும் துன்பம் பனிபோல் நீங்கும். இவ்வுலக வாழ்வை நீங்கிச் சென்ற பிறகும், வானில் அரசாள முடியும். அதாவது, சொர்க்கத்தில் இடம் நிச்சயம். சொல்பவர், அற்புதங்கள் பல புரிந்த அருளாளர் ஞானசம்பந்தர்.

 

 

 

மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி

நாதன் வேதியன் ஞானசம்பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை

ஆத ரித்திசை கற்றுவல்லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை

வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே. (சம்பந்தர் தேவாரம்)

-    சிவபெருமானைப் போற்றி வணங்குவோம். பண்ணோடு பாடினால் நலம். இயலாவிட்டால் ஓதுவார் பாடுவதைக் கேட்டு சிந்தையில் சிவனை இருத்தினாலும் சரியே.

அவ்வாறு செய்தால் இந்தப் பிறவியிலும் இறந்தபின் மேல் உலகத்திலும் வருத்தம் எதுவும் இல்லாமல் மகிழ்வாக, நிம்மதியாக வாழலாம்.

 

 

முக்தி /சிவனடி:

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

இது அப்பர் பெருமானின் வாக்கு. முக்திக்கு வழி காட்டுபவர் சிவனே!.

பெயரும் உருவமும் இல்லாத சொரூப நிலையில் இருந்தபடி சிவபெருமான் ஐந்தொழில் ஆற்றுகிறான். அதில் அருளல் எனும் தொழிலை ஆற்றுகையில் சதாசிவம் ஆகிறான். அதாவது, இறைவன், உயிர்களின் பொருட்டு, உடலையும் உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்ட அளவில் இறைவனின் அறிவும் ஆற்றலும் சம அளவில் கலந்து எழுந்ததே சதாசிவத் திருமேனி. அதுவே சிவலிங்கம்!

முக்தி நிலையை அடைய விரும்பும் உயிர்களுக்கு அதனை அளிக்கக் கோரி, மோட்ச தீபம் ஏற்றி இந்துக்கள்  வழிபடுகின்றனர். வாழுங்காலத்தில் வழிபடாது இருந்தவர்கள் உயிரை விட்ட பின்னர், அவர்களுக்காகப் பிறர் வேண்டுவது உயர்ந்த பலன் அளிக்காது. உலகில் தம் பிறவிக் காலம் முழுதும் உள்ளத்தில் இறைவனை நிறுத்துபவர்க்கு முத்தி நிச்சயம்.

 

பேரோர் ஆயிரமும் உடையானை பேசினாற் பெரிதும் இனியானை

நீரூர் வார்சடை நின்மலன் தன்னை நீடூர் நின்றுகந்திட்ட பிரானை

ஆரூரன் அடி காண்பதற்கன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இம்மாலை

பாரூரும் பரவித்தொழவல்லார் பத்தராய் முத்திதாம் பெறுவாரே (சுந்தரர்)

-    முத்திக்கு ஒரு கொடுப்பினை வேண்டும். தகுதியுடைய ஆன்மாக்களை இறைவன் வழிநடத்தி முத்திக்கு இட்டுச்செல்வான். சுந்தரர் திருநின்றியூரை வழிபட்டுச் செல்லும்போது உள்ளுணர்வால் நீடூருக்குச் சென்று அங்கு வழிபட்டார். முத்தி தென்பட்டது. பதிகம் பாடினார்.

 

நிறைவுரை:

திருமந்திரம் சொல்லும் கருத்து இதுவே:

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

தமிழில் திருமுறை பாடி வழிபாடு செய்ய நல்ல வாய்ப்பு இந்தப் பிறவியில் நமக்குக் கிட்டியுள்ளது. சைவராக வாழ்வோம். அனாதியே கேவல நிலையில் கட்டுண்டு கிடந்த உயிர்களாகிய நமக்கு இப்போது ஆணவ மலம் நீங்கி அறிவொளி பெறச் சிறந்த சந்தர்ப்பத்தை ஆண்டவன் வழங்கியிருக்கிறார். அதனை நன்கு பயன்படுத்திக்கொள்வோம்.

 

ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி

மேலுங் கிடந்து விரும்புவன் நானே (திருமந்திரம்)

 

இந்நிலவுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடியைத் தான் மிகவும் விரும்பி வணங்கிவந்த திருமூலர், நமக்கும் அவ்வழியே காட்டுகிறார். நாமும் அவர் காட்டிய வழியில் செல்வோம்.

 

சிவபெருமானை வணங்குவோம்

வாழ்வில் இன்பமே சூழும்

இவ்வுலகிலும் அவ்வுலகிலும் நன்றாக வாழலாம். 

சிவ சிவ.

 

திருச்சிற்றம்பலம்



 

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...