Friday, March 11, 2022

பாவமும் பழிச்சொல்லும் நீங்க வேண்டுமா?

நீங்கள் எல்லாரும் பாவிகள், (sinners)  என்று ஒருவன் இன்னொருவனிடம் சொன்னானாம்.  

அதற்கு மற்றவன் சொன்ன பதில்:

“ ஆமாம், எல்லாரும் பாவிகள், அதிலும், என்னைப்  பாவி என்று சொல்லும்  நீதான் மிகப் பெரிய பாவி,  படுபாவி.” என்று திட்டினானாம்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டால் பாவம் தீருமா? தீராது. முந்திய பிறவியில் செய்த வினைகளின் பயனாகத்தான் மீண்டும் பிறவி எடுத்துப் பிறந்திருக்கிறோம். இந்தப் பிறவியில் மேலும் பாவம் சேர்க்காமல் இருப்பதுதான் அறிவுடைமை, அல்லவா?

ஒருவர், அல்லது ஓர் உயிர், பாவம் செய்தால்தான் அதற்குப் பிறவி ஏற்படும் என்றில்லை. நல்ல வினைகள் செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் மனிதப் பிறவி கிட்டுவது உண்டு. அவர்கள் பூமிக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு நன்மை செய்து நல்வழி காட்டி மேல் நிலைக்கு உயர்த்துவதுதான். எடுத்துக்காட்டாகத் திருஞான சம்பந்தரையும் மற்ற பல நாயன்மாரையும் கூறலாம்.

பெரும்பாலும் மனிதராகப் பிறப்பவர் அத்தனை பேருக்குமே புண்ணியம், பாவம் இரண்டுமே வாழ்வில் இருக்கும்; ஆனால் வெவ்வேறு விகிதத்தில் கலந்திருக்கும்.  பாவங்களுக்காகத் துன்பம் அனுபவிக்கும் அதே வேளையில் புண்ணியங்களினால் கிடைத்த இன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் மக்கள். ஆகவே, சும்மா பாவிகள் என்று திட்டுவது தவறு, நல்வினை, தீவினை இரண்டையும் கலந்து அனுபவிக்கப் பிறந்திருக்கும் ஆன்மா என்று சொல்லலாம்.

பூமியில் வாழும்போது தங்கள் பாவக் கணக்கை விரைவாக முடித்துவிட்டு, புண்ணியங்களை மட்டும் அதிகரிக்க விரும்புவோர் என்ன செய்யலாம்? முடிந்தவரை நேர்மையாக இருக்கலாம். தான தர்மங்கள், சேவைகள் போன்றவற்றின் மூலம் அதிக புண்ணியங்களைச் சேர்க்கலாம்.

இவற்றைத் தாண்டி நாம் செய்யக்கூடிய முக்கியமான செயல் ஒன்று உண்டு. அது, இறைவனை வணங்குவதாகும். நம் தமிழ் ஆன்மீகம் காட்டும் வழிமுறை அதுவே.

எடுத்துக்காட்டுக்கு ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி நாயனார் மிக அழகாகச் சொல்லியிருப்பதைச் சிந்திப்போம்.

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே

நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே

சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்

கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.(7.81)

இந்த மந்திரப் பாடலின் பொருள்:

உலக மக்களே, தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே ; அங்குச் செல்லுங்கள். மற்ற உயிர்களுக்குத் துன்பம் தந்து நீங்கள் சேர்த்து வைத்த பாவங்களை நீக்க முயலுங்கள். உங்கள் பாவங்கள் காரணமாக, உங்களைப் பார்த்துப் பலரும் பல இகழுரைகளைச் சொல்லுவார்கள். அவ்வாறு இழிவுபட்டுத் துன்புறச் செய்யும் உங்கள் பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்காகப் பலமுறை சென்று வணங்குங்கள்.

சிந்தனை:

திருக்கழுக்குன்றம் தமிழ் நாட்டில் உள்ளதே, நாம் பலமுறை எப்படிச் செல்வது என்று கவலைப்படவேண்டாம்.

இப்பாடலை மனத்தாலோ வாயாலோ பாடி, கழுக்குன்றக் கோவிலில் வீற்றிருந்து அருள்புரியும் சிவபெருமானை மனத்துக்குள் எண்ணி வேண்டினால் போதும். நம் பாவங்கள் அனைத்தும் மறையத் தொடங்கும்.  அதனை வாழ்வில் நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள் பலர் உண்டு.

மேலும், நம்மைத் தாக்கிப் பேசும் எதிரிகளைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்பதையும் இந்த மந்திரப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

நாம் செய்த தீய வினைகளின் காரணமாக, பிறர் இகழ்ந்து பேசுவதைக் கேட்டுத் துன்புற நேற்கிறது. அவ்வாறு இருக்கையில் அந்த எதிரிகளைப் பழி வாங்குவதால் பெரிய முன்னேற்றம் வராது. மாறாக, வினைகளை நீக்க உதவும் சிவபெருமானை வணங்கினால், புறம் பேசிய அதே எதிரி உங்களைப் புகழ்ந்து பேசும் வண்ணம் சூழ்நிலை மாறும்.

ஆகவே, பக்திக்கு முதலிடம் தருவோம். பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ள வழிகாண்போம்.

ஓம் நம சிவாய. !


No comments:

Post a Comment

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...