15.1.2026
தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு - ஒரு சிந்தனை!
(எழுத்து:
முனைவர் ச மீனாட்சி, தலைவர், சிங்கப்பூர்
சைவ சித்தாந்த சங்கம்)
தை முதல் நாள். தமிழர்களின் புத்தாண்டு! இது உழவர்களுக்குரிய பொங்கல்
திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது . எனினும், சித்திரை மாதம் முதல் நாளையே இக்காலத்
தமிழர் பலர்
தமிழ்ப் புத்தாண்டாகக் கருதுகிறார்கள். சித்திரைப் புத்தாண்டு, இந்துப் புராண அடிப்படையில் 60
ஆண்டு கால சுழற்சி வருடங்களாக வரும். அது பல்லவர் காலத்தில்
அறிமுகமானதாக அறியப்படுகிறது.சுழற்சியாக வருவதால், இது காலக் கணக்கைச் சரியாகத் தர
இயலாது. மாறாக,
தமிழ்ப் புத்தாண்டு என்பது தொடராக வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு (Gregorian calendar) அவர்களின்
கலாசாரத்தில் முக்கியமானவராக விளங்கும் ஜீசஸ் என்பவரின் வாழ்வுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பது போல் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் மாமுனிவர் திருவள்ளுவரின்
வாழ்வுக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
ஓர் ஆண்டு முடிந்து மறு ஆண்டு தொடங்கும்போது
வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களைக் கழித்துக்கட்டி, வீட்டைப் புதுப்பிக்கும் வழக்கம் பொதுவாக ஆசியப் பண்பாடுகள் பலவற்றிலும்
காணப்படுவதுதான், சீனப் பண்பாடு உட்பட. அவ்வாறே,
பொங்கல் தினம், தமிழர்களின் புத்தாண்டாகப் பல்லாண்டு
காலம்
கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.தமிழ் கிராமங்கள் பலவற்றில் புத்தாண்டை முன்னிட்டு வீட்டைச்
சுத்தப்படுத்தி வெள்ளையடித்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தாடை
அணிந்து, அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து பெறப்பட்ட புது அரிசியில் பொங்கல்
வைப்பது வழக்கம். தை முதல் நாளில் புத்தாண்டு தொடங்குவதால் “தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கும்
வந்தது.
தை மாதத் தொடக்கத்தைத் தமிழர்கள் ஏன் ஆண்டின்
தொடக்கமாகக் கொண்டனர் என்பதற்கு ஓர் அறிவியல் காரணமும் உள்ளது. தமிழர்கள் சூரியனைக் காலக்கணக்கிற்கான ஒரு வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து
வந்திருக்கிறார்கள். பொங்கலன்றுதான் சூரியனின் வடபுலப் பெயர்ச்சி
நிகழ்கிறது. தென்புலச் சுழற்சியிலிருந்து வடபுலச் சுழற்சிக்கு சூரியன் மாறும் நாளே
ஓர் ஆண்டுக் கணக்கின் தொடக்க நாளாகக் கொள்வதற்கு ஏற்ற நாள் என்று நம் முன்னோர்
கணக்கிட்டனர். அதனாலேயே பொங்கல் திருநாளைப் புத்தாண்டாக நம் முன்னோர் கொண்டாடி
வந்திருக்கிறார்கள். இவ்வாறு பலவகையில் சிறந்து விளங்கும் தை மாதத்தின் முதல்
நாள் தமிழரின் வாழ்வில் அதிகாரபூர்வமாகப் புத்தாண்டாக அறிவிக்கப்படாமலேயே கொண்டாடப்பட்டு
வந்திருக்கிறது. காலத்துக்கேற்ப, ஆண்டுக் கணக்கு தேவை என்ற சிந்தனை எழுந்தபோது
தமிழறிஞர்கள் பலர் கூடி, திருவள்ளுவர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கணக்கை
அறிமுகப்படுத்தினர்.
ஆங்கிலக் கணக்கின் 2026-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு 2057 தொடங்குகிறது.
திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை மாதம். தமிழ்ப்
பேரறிஞர் மு வரதராசனார் இவ்வாறு கூறுகிறார்:” முற்காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை
முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகத் தமிழ் நாட்டில்
வழங்கி வந்திருக்கிறது. அந்த நாள்முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும்
புது வாழ்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பழக்கங்களை ஏற்படுத்தினார்கள்.
புதிய ஆடைகளை வாங்கி உடுத்தினார்கள். வீட்டுக்கு வெள்ளையடித்து
அழகுபடுத்தினார்கள். போக வேண்டிய பொருட்களை எல்லாம் போகிப் பண்டிகையாகப் போக்கிவிட்டு புதிய நாளில்
பொங்கலோ பொங்கல் என்று புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்கள். வருடப்
பிறப்பாகப் பொங்கலை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.” இது தமிழறிஞர் டாக்டர் மு.வ. வின்
கருத்தாகும்.
விருது பெற்ற பழம்பெரும் எழுத்தாளர் அகிலன், தமது 'மிராசுதார் மகள்'
என்ற கதையில் "தை மாதப் பிறப்புக்கு முதல்நாள் காலைப்பொழுது" என்று ஒரு கதையைத் தொடங்கியுள்ளார். அதில் அவர் " போகிப்
பண்டிகை. மறுநாள் பொழுது விடிந்தால் புத்தாண்டு. புதுப் பொங்கல்" என்று
எழுதியிருக்கிறார். தமிழர்களின் புத்தாண்டாம் பொங்கல் நாளைச் சிறப்பாகக்
கொண்டாடுவோம்.
குறிப்பு:
தைப் புத்தாண்டு கொண்டாடினால் சித்திரைப் புத்தாண்டு
கொண்டாட முடியாதா என்று சிலர் கேட்கின்றனர். தமிழர்களின் பண்பாடு வேற்றுமையில்
ஒற்றுமை கொண்டது. ஆகவே பலவிதப்
புத்தாண்டைக் கொண்டாடலாம். அது அவரவர் விருப்பம்.
மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற தெய்வங்கள் காக்கும் நால்வகை
நிலம் தமிழகத்தில் இருந்தாலும் ஒரே மொழி பேசப்பட்டது என்று தொல்காப்பியம் விவரிக்கிறது.
தாம் வாழும் நிலத்துக்கேற்ற வெவ்வேறு தெய்வங்களைத் தமிழர்கள் வணங்கிவந்தபோதும்
அனைத்து தெய்வங்களையும் செயற்படுத்தி அருளும் ஒரே கடவுளாகச் சிவனைப் போற்றி
வந்தனர் என்று சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. ஒரு மரத்தின் பல கிளைகளாகப்
பரந்து விரிந்து வளர்ந்து, மாறியும் வந்துள்ளது தமிழ்ப் பண்பாடு. வளரும்போது பல
மாற்றங்களும் தோற்றங்கள் கண்டு வந்துள்ளது.
புத்தாண்டு என்பதும் அவ்வாறே! உழவுத் தொழிலுக்கு
முக்கியத்துவம் தந்தவர்கள், அறுவடைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். காலவோட்டத்தில்,
சூரியன் மேஷ ராசியில் புகும் நாளான சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டனர் தமிழ் மக்கள் பலர். ஆவணி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடிய வழக்கமும் அக்காலத் தமிழரைடையே, குறிப்பாக சேர நாட்டுத் தமிழரிடையே இருந்ததாகவும் தெரிகிறது. .
எது எவ்வாறாயினும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று
உணர்த்திய திருவள்ளுவர் பெயரில் அறிவிக்கப்பட்ட புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு
என்று ஏற்பது மிகப்பொருத்தமாகும். ஏனெனில், இதுவே காலக் கணக்கும் திருவள்ளுவரின்
பெயரும் கொண்டுள்ளது. அனைவருக்கும் இப்புதிய ஆண்டு இனிமையாக அமைய இறைவன் அருள்வானாக.
ஓம் நம சிவாய.!






