நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்!
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சில வரிகள்:
"பாதி மதிநதி போதுமணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"
முதல் இரு வரி, பிறை சூடிய சிவபெருமான் நமக்கு அருளிய குமரேசன் என முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறது.
திருமால், முருகன், அம்மன், என ஆயிரம் தெய்வங்கள் மக்களுக்கு அருளுகின்றன. அனைத்து தெய்வங்களுக்கும் ஆணையிடும் பெருங்கடவுள் சிவனின் அருளால்தான் நமக்கு முருகப்பெருமானின் தரிசனமும் வழிகாட்டலும் நேரடி அருளும் கிடைக்கிறது.
முருகனை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம் ஆகும். வேண்டியது நிறைவேறிய மகிழ்ச்சியினால், மக்கள் காவடி சுமந்தும் பால்குடம் தூக்கியும் முருகனுக்கு நன்றி கூறும் அழகிய நிகழ்வு தைப்பூச நன்னாளில் நிகழ்கிறது.
மதி நதி போதும் அணி சடை என்ற வரியில், சிவபெருமான் தன் தலையில் கங்கையைச் சூடிய தன்மை கூறப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரரான சிவன், ஆணும் பெண்ணுமாக சமபாகத்தில் தோற்றமளித்து, உலகில் ஆன்மாக்கள் ஆணும் பெண்ணுமாகப் பிறவி கொள்ளும்போது சமமாகத் தம் அருளைப் பெறுவதை உணர்த்தினார். ஆண், பெண் இருபாலரும் சமமான தெய்வத்தன்மை கொண்டிருப்பதைக் கூறும் உயர்ந்த சமயம் இந்து சமயம்!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா...
இந்த வரியின் பொருள்: சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற
இனிய மொழியை உடைய மாதரசி குறமகளாகிய வள்ளியின்பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே.