Saturday, October 28, 2023

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ்வார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)

இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வருமாறு: 

மலர்மிசை - இதயக் கமலம் எனப்படும் மலர் போன்ற மனத்தின் மீது, அதாவது அடியார்களின் உள்ளத்தில்

ஏகினான் - ஏகியவன் / வீற்றிருப்பவன்/ பரவியிருப்பவன்

மாணடி  - மாண்புமிகு அடிகள், சிவபெருமானின் சிறப்புமிகு பாத கமலம்

சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்

நிலமிசை  -  விண்ணுலகத்தில் 

நீடுவாழ்வார் - நிரந்தரமாக வாழ்வர்.

ஆகவே குறளின் பொருள்: 

சிவபெருமானின் திருவடிகளில் சேர்பவர்கள் நிரந்தரமாக சொர்க்க வாழ்வை அனுபவிப்பர். மறுபிறவி எடுத்து அவதிப்படமாட்டார்கள்.

அந்த நிலையை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 

இந்தஉலகத்தில் வாழும் காலத்திலேயே சிவபெருமானைச் சிந்திக்கவேண்டும். நம் மனத்துக்குள் வேறு சிந்தனைகள் புகுவதைத் தவிர்த்து சிவ சிந்தனையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு உதவும் திருமுறைகளைப் பாடவேண்டும். 

சிவாய நம. !


 27.10.23 அன்று சிவத்தமிழ்ச் செல்வர் ஆறு நாகப்பன் அவர்கள் நடத்திய திருக்குறள் வகுப்பில் தெளிவுபடுத்தப்பட்ட முக்கியமான உண்மைகள்:

1) ஏகினான் என்ற சொல்லை நடந்தான் என்ற பொருளில் சமணர்கள் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், அவர்களது ஆதி குருவாகிய அருகர் மலர் மீது நடந்தார் என்று கருதுவதால் அப்படிச் சொல்கின்றனர். ஆனால், நீடு வாழும் குறிப்பு அவர்களின் சமயத்தில் கிடையாது. ஆன்மாக்கள் சிவனடியில் சேர்ந்து நிரந்தரமாக வாழும் கருத்து சைவ சமயத்தில் மட்டுமே உள்ளது. 

2) அன்பர் உள்ளத்தில் இறைவன் வீற்றிருப்பான் என்பது சைவத் திருமுறைகள் அனைத்தும் வலியுறுத்தும் கருத்து. அதுவே இங்கும் பொருத்தம்.  'சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லார்' இறைவன் அருள் பெறுவார் என்பது திருமுறை. மனம்தான் இங்கு முக்கியம். மனத்தில் இறைவனை நிறுத்துபவர் 'விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே' என்பதும் ஞானசம்பந்தர் வாக்குதான்.  

3) மலர் என்றதும் உடனே அருகர் என்று சொல்வது பெரும் பிழை. ஏனெனில் அருகர் மட்டுமின்றி புத்தர் உட்பட்ட இந்தியப் பெருமக்கள் பலரும் தாமரை மீது அமர்ந்திருப்பதும், மலர் தூவி வாழ்த்தப்படுவதும் பொதுவாக இருப்பதால், இது ஒருவருக்கு மட்டும் உரித்தான செயல் இல்லை. தவிர, அருகரும் புத்தரும் மனிதர்கள், உயர் ஆன்மாக்களே தவிர கடவுள் இல்லை. இவ்விரு மதங்களிலும் இறைவன் திருவடியில் ஆன்மாக்கள் சேர்வது பற்றிய சிந்தனையும் இல்லை. 

4) நாத்திகவாதிகள் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தைக் கீழறுக்க முயன்று, தவறான கருத்துகளைப் புகுத்தினர். ஆனால், அவை பிழையென்று மக்களால் எளிதாக உணர முடியும். ஏனெனில் வேறு பல குறட்பாக்களில் சைவ சமயக் கோட்பாடுகளும் ஆன்மீக விளக்கங்களும் காணப்படுகின்றன.  

சிவ சிவ! 

இந்தக் குறள் குறித்த வெவ்வேறு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் காண:http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0003.aspx

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...