Wednesday, September 06, 2023

குல தெய்வமும் பரம்பரையும்

 அண்மையில் Quora  தளத்தில் பின்வரும் உரையாடலைப் படித்தேன். 


குல தெய்வம் கண்டுபிடிப்பது ஒரு பெரிய வேலையே இல்லை பவித்ரா அவர்களே.

உங்கள் கணவரின் சொந்த ஊரில் உங்கள் சமூகத்திற்கு சொந்தமான ஏதாவது கோவில் இருந்தால் பெரும்பாலும் அதே கோவிலாக தான் இருக்கும் இல்லை என்றால் அங்கே இருக்கும் பூசாரியை கேட்டால் சொல்லிவிடுவார்.

அப்படி தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் திருச்செந்தூர் முருகன்.

இந்து மதத்தில் ஈடுபாடு காட்டுபவர் குல தெய்வ வழிபாட்டை ஒப்புக்கொள்வாரா என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.


********************************************************************************************************

அவருடைய பங்காளிகள் அல்லது அவர்களின் வாரிசுகள் யாராவது,அவருடைய சொந்த ஊரில் இருப்பார்கள்!அவர்களிடம் விசாரித்தால்,அவர்கள் வணங்கும் குலதெய்வத்தின் பெயரை அறிந்து கொள்ளலாம்!பங்காளிகளின் குலதெய்வம்தான் இவருக்கும் குலதெய்வம்!

இம்முறையிலும் அடையாளம் காண முடியாவிடில், 'எனது முன்னோர் வணங்கிய குலதெய்வத்தை நான் வணங்குகிறேன்' என்று கூறி,மானசீகமாக நினைத்து வணங்கினால் போதுமானது!

குலதெய்வ வழிபாடு நன்மக்கட்பேறை உறுதிப்படுத்தும்!ஆண் வாரிசுகள் அதிகம் உண்டாவார்கள்!மாதம் ஒருமுறையாவது,குலதெய்வத்தை மனதார நினைத்து வணங்குவது அபரிமிதமான பலன்களை அள்ளித் தரும்!

தங்களின் கணவருக்கு எமது வாழ்த்துக்கள்!


********************************************************************************************************


மேற்காணப்படும் அந்த இரு பதிவுகள், தமிழர்களின் குலதெய்வம் குறித்த நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றன.

ஒருவரின் குலதெய்வம் அவரது பரம்பரையின் அடையாளமாகும். குலத்துக்கு உரிய தெய்வம் எனப் பொருள்பட்டாலும் உண்மையில் அது குடும்பத்துக்கு உரிய தெய்வமாகும்.

ஆண் பிள்ளைகளுக்கு ஒரே குலதெய்வம். பெண்பிள்ளைகள் திருமணத்துக்குப் பின் கணவரின் குலதெய்வத்தைக் கும்பிடுவர்.

ஒரு குலத்தின் தெய்வம், யார் யார் தன் பரம்பரையில் பிறக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்து ஆசி வழங்கி அந்தந்த ஆன்மாவைத் தன் பரம்பரையில் பிறக்க வைத்து அருளும் என்பதே அடிப்படை நம்பிக்கை. 

இஷ்ட தெய்வத்தையும் பரம்பொருளான சிவபெருமானையும் வணங்கி வந்த தமிழர்கள், கூடவே குலதெய்வத்தையும் போற்றி வந்தனர் என்பதே வரலாறு.

வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர், ஆண்டுதோறும் தவறாமல் ஊருக்குச் சென்று தங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 



இது தொடர்பான என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

 நான் சிங்கப்பூரில் பிறந்ததாலும், அந்தக் காலத்தில் (1960s,70s) வெளிநாட்டுப் பயணம் அடிக்கடி செல்ல வசதி இல்லாததாலும், குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. உள்நாட்டுக் கோவிலுக்கு, குறிப்பாக நான் வசித்த தஞ்சோங் பகார் வட்டாரத்துக்கு அருகிலுள்ள மாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி ஆலயம்,  முதலிய கோவில்களுக்குதான் அடிக்கடி செல்வதுண்டு.  சிவபெருமான் அருளால் 40 வயதுக்குப் பிறகு, அடிக்கடி தமிழ்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அவ்வாறு ஒருமுறை நானும் என் தாயாரும் இந்தியாவுக்குச் சென்றோம். அங்குக் கிராமத்தில் குறி சொல்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் குலதெய்வ வழிபாடு இதுவரை செய்யாவிட்டாலும் இனிமேலாவது செய்யுங்கள் என்றார்.

உடனே, அருகில் அமர்ந்திருந்த என் தாயாரிடம் சொன்னேன், "நாளையே நாம் சோழப்பிராட்டி அம்மன் கோவிலுக்குச் செல்வோம். அல்லது நெய்வாசல் கருப்பர் கோவிலுக்குச் செல்வோம்" என்று. அதைக் கேட்டதும் குறிகாரர் குறுக்கிட்டார்.

"அம்மா, உங்கள் தாய் தந்தையரின் குலதெய்வம் இப்போது உங்களுக்குப் பொறுப்பேற்காது. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டுக் குலதெய்வத்தையே வணங்கவேண்டும்" என்றார்.

அது எந்த தெய்வம் என்று கேட்டபோது, "அவர் ஓர் ஐயனார். அங்கு ஒரு நாச்சியாரும் உண்டு. அவர்களின் கோவில் இங்கு இல்லை. தூரத்தில் பட்டுக்கோட்டைப் பக்கம் உள்ளது." என்றார். 


உடனே என் கணவரைத் தொலைபேசியில் அழைத்தேன். குலதெய்வம் யாரெனக் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூரில்  உறவினர் பலர் இருப்பதால் அவர்களிடம் கேட்க முனைந்தார்.  காலஞ்சென்ற என் மாமனாரின் உறவினர்கள் சிலரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரித்த பின்னர், அவர்களில் ஒருவர் கொடுத்த விவரத்தை வைத்து,  வாட்டாக்குடி வீரனாரையும் நாச்சியாரையும் கண்டறிந்து அங்குள்ள எங்கள் குடும்பக் கோவிலுக்குச் சென்று சேர்ந்து, பங்காளிகள், குடும்பத்தார் முதலியோரை அறிமுகப்படுத்திக் கொண்டு, மனமகிழ்வெய்தினோம். 


தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கோவில் கொண்டிருக்கும் குலதெய்வம், சிங்கப்பூரில் பிறந்த என்னை அங்கு வரவழைத்த விதம் என்னால் மறக்க முடியாதது. பட்டுக்கோட்டைப் பக்கம் உள்ளதுதான் என் குலதெய்வம் என எங்களில் யாருக்குமே தெரியாத நிலையில் காரைக்குடிப் பக்கம் இருந்த அந்தக் குறிகாரருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று நான் எப்போதும் வியந்து போவேன். குறி சொல்பவர்களுக்கு அந்தத் தகவலைச் சொல்வது யார்? அது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஆச்சரியமாகத் தோன்றுகிறது.   அந்த தெய்வமே வந்து குறி சொல்பவரிடம்  அறிவித்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. எல்லாம் அவன் செயல். 


மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்.

ஓம் நம சிவாய! 


********************************************************************************************************

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...