Sunday, May 05, 2019

மதமாற்றிகளுடன் உரையாடல்

மதமாற்றிகளுடன் உரையாடல்.
( மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்)
கடந்த ஐம்பது ஆண்டுகளில் நான் சந்தித்த தமிழ் பேசும் கிறிஸ்தவ மதமாற்றிகளுடன் நடைபெற்ற சுவையான உரையாடல்கள் சிலவற்றின் தொகுப்புதான் இந்தச் சிறு நூல். அவர்களின் பொதுவான கருத்துகள், சிந்தனைகள், அவற்றைப் பிறரிடம் திணிக்க முயலும் போக்கு இவையெல்லாம் எனக்குள்ளும் பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. பல கேள்விகளை எழுப்பியது. தமிழரின் சமயத்தைப் பற்றி ஆராயும் ஆர்வத்தை தூண்டி, தெளிவைப் பெற வழிவகுத்தது. என்னைப் போலவே, பல தமிழர்கள் மதமாற்றிகளைச் சந்தித்திருக்கக் கூடும். அவர்களுள் பலர் எந்தப் பேச்சுக்கும் மசியாமல், தமிழ் மதத்தை விட்டு விலகாமல் இருந்திருப்பர். அவர்கள் அனைவருக்கும்  ச்சிறுநூல் சமர்ப்பணம். சிவ சிவ.

ஒரு கடவுளா பல கடவுளா?
மதமாற்றி :
உங்கள் மதத்தில் ஒரு கடவுள் இல்லை. பல கடவுளர் உண்டு. யாரைக் கும்பிடுவது என்று தெளிவாக இல்லை. எங்கள் மதத்தில் ஒரு கடவுள் இருப்பதால் ரொம்பத் தெளிவான வழிகாட்டுதல் உண்டு.

நான்:
கிறிஸ்தவ மதத்தில் ஒரு கடவுள் என்கிறீர்கள். அந்த ஒரு கடவுளின் பெயர் என்ன? அவரது தன்மை என்ன? ஒரே கடவுள் கொண்ட ஒரே மதம்தான் என்றால் அதில் ஏன் இவ்வளவு பிரிவுகள்?
பரம பிதாவைக் கும்பிடுவோர், மேரி மாதாவைக் கும்பிடுவோர், ஏசுநாதரையே கடவுளாகக் கும்பிடுவோர், (ஏனென்றால், அவர் தன்னையே கடவுள் என்று சொல்லியிருப்பதால்), இன்னும் வெவ்வேறு தேவதூதர்கள் , புனிதர்கள் ( எ.கா, பீட்டர், தோமஸ் முதலியோர்) – இப்படி ஏகப்பட்ட தெய்வங்கள் இருப்பது உண்மைதானே?
மெதடிஸ்ட், ஆங்கிலிக்கன், புரொடெஸ்டண்ட், இப்படி ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு மாதிரி வழிபாடு செய்வது ஏன்?   உங்கள் மதத்தினர், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்திருந்தால் மற்ற பிரிவினர் நடத்தும் தேவாலயத்தில் போய் வழிபடக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதாமே? ஒரே கடவுளை வணங்கும் ஒரே மதத்தினரிடம் ஏன் இந்தக் குழப்பம்?

மதமாற்றி:
அது… மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எங்கள் மத நூலில் ஒரு கடவுள் என்றுதான் உள்ளது. அது பரமபிதா மட்டுமே. வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லாரும் தப்பாகச் செல்கிறார்கள்.

நான்:
அப்படியானால், உங்கள் கவனம் ஏன் அவர்கள் மீது இல்லை? உங்கள் சொந்த மதத்தில் உள்ள குழப்பங்களைக் களைவதற்கு முயற்சி மேற்கொள்ளாமல் அடுத்த மதத்தைச் சார்ந்தவர்களை ஏன் மாற்ற முனைகிறீர்கள்? உங்களைப் போலவே நாங்களும் குற்றம் காண்பதையே நோக்கமாக் கொண்டு உங்கள் சமயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு இனிக்குமா? சிந்தியுங்கள்.
பிறர் மீது குறை சொல்லும் முன் தன்னைப் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்பதை உணர்த்தவே மேற்காணும் கேள்விகளைக் கேட்டேன். மற்றபடி  இகழ்வதற்கல்ல. இனி, 

எங்கள் சமய விளக்கம்:
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது  திருமந்திரம்.
ஏகன் அநேகன் என்பது திருவாசகம்.
இறைவன் ஒருவனே. ஆனால் அவன் ஆணையின் கீழ் இயங்கும் தெய்வங்கள் நிறைய உண்டு. பல்வேறு தெய்வங்கள் உலகின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவ வல்லவை.  அந்தந்த இடங்களில் உள்ள குலதெய்வங்கள், குருமார்கள் முதலியோர் தங்களை நம்பும் மக்களுக்கு வழிகாட்டியும் அருள் புரிந்தும் வந்திருக்கலாம். ஆனால், அந்தத்  தெய்வங்கள் அத்தனையையும் செயல்படுத்தி,  உலகில் அருட்செயல்கள் செய்ய வைக்கும் இறைவன் ஒருவனே. 

கணபதி முதற்கொண்ட தெய்வங்கள் பல மக்களுக்கு உதவும். ஆனால் அவை அவ்வாறு உதவக் கட்டளையிடுபவனும் சிவனே என்பது நம் தமிழர் மதம்.
எ.கா. 1:
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடி *கணபதி* வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
(திருஞானசம்பந்தரின் முதல் திருமுறையில் 123 ஆவது திருப்பதிகத்தில் ஐந்தாவது திருப்பாடலாகக் காணப்படுவது.)
பொருள்: தன் திருவடிகளை வழிபடும் அடியவர்களின் இடர்களைக் களையவேண்டி, கணங்களுக்கு எல்லாம் பதியாக, கணபதி வருவதற்குத் திருவுள்ளம் பற்றி அருள் புரிந்தார், சிவபெருமான். 

மதமாற்றி:
பல தெய்வங்கள் உள்ளதை எப்படி நாம் நம்புவது?

நான்:
ஒரே இறைவன் இருந்தாலும், உலகில் மக்களை நேரடியாகச் சென்று எட்டும் தெய்வங்கள் நிறைய உள்ளன என்பதை மனித குலத்தின் வரலாறு காட்டுகிறது. வெவ்வேறு தெய்வங்கள் தங்கள் கனவில் வந்ததாகவும் தாங்கள் வேண்டியதைத் தந்தாகவும் எவ்வளவோ அனுபவங்கள் உள்ளன. ஏன், உங்கள் கிறிஸ்தவ மதத்திலேயே, நிறைய புனிதர்கள் உள்ளனரே. அவர்களையெல்லாம் நீங்கள் மதிக்கவில்லையா? எல்லாத் தெய்வங்களையும் ஏதேனும் காரணத்தோடுதான் சிவபரம் பொருள் அனுப்புகிறதென்பது தமிழர் கொள்கை.

நாம் அனைவரும் தமிழர்தானே? நம் வரலாற்றைப் பாருங்கள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களிலும்  பாலை நிலத்திலும் வாழ்ந்த   மக்களுக்கு முருகன், திருமால், இந்திரன், வருணன் கொற்றவை ஆகிய தெய்வங்கள் அருள்புரிந்து வந்த விவரம் உள்ளதல்லவா? அவர்களையும் தவிர்த்து, கூடவே, அந்தந்தக் குலங்களுக்குரிய குல தெய்வங்களும் குடிமக்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வந்தனவல்லவா? இதெல்லாம் நம் கிராமங்களில், பாரம்பரிய வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும் உண்மைகள்.
அதே சமயத்தில், அத்தனை தெய்வங்களையும் ஆட்டுவிக்கும் சக்தி படைத்த பேரறிவாளனாக, பெருங்கருணையாளனாக ஒரே ஒரு பரம்பொருளாக சிவபெருமான் விளங்கி வந்தையும் நம் தமிழ் நூல்கள் சொல்கின்றனவே! தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் சங்க இலக்கியங்களையும் திருமுறைகளையும் கொஞ்சம் படித்திருந்தால் உங்களுக்குத் தெளிவு வந்திருக்குமே?

மதமாற்றி:
இருந்தாலும் இத்தனை தெய்வங்கள் இருப்பது குழப்பம்தானே? நாங்கள் அப்படி இருப்பதை விரும்பவில்லை.

நான்:
பல தெய்வங்கள் உள்ளதைக் குறையாகச் சொல்லாதீர்கள்.
அந்தக் கொள்கைதான் சரியானது. ஏனென்றால், பலப்பல நாடுகளில் பல தெய்வங்கள் அருள் புரிந்ததற்கு அன்று முதல் இன்று வரை சான்று உண்டு. அந்தப் பன்மையை ஏற்றுக்கொண்டால்தான் உலகில் அமைதி நிலவும். இன்றும் கூட, பல குருமார்கள், அதிசயங்களை நிகழ்த்தக் கூடிய ஆன்மாக்கள் உலகில் பிறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்? குரு நானக் முதல் சாய்பாபா வரை, பல குருக்கள், தங்கள் சீடர்கள் வேண்டும் வரங்களைத் தந்து உதவிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

இந்த உண்மை உணர்ந்ததால்தான், இந்துக்கள், மற்ற மத்தினரை இழிவாகப் பேசுவதில்லை. மற்ற மதங்களை அழிக்கவோ மற்ற இறைதூதர்களைக் கேவலமாக எண்ணவோ செய்வதில்லை. அனைத்தும் அந்தப் பரம்பொருளான அரன் செயல் என்ற எண்ணத்தால்தான் எங்களிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது. மனித நேயம் இருக்கிறது.

இந்துக்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், அங்கு மற்ற மத ஆசிரியர்கள் பணிபுரியலாம். அவர்களை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் குறுகிய மனப்பான்மை கிடையாது. தன் மதத்தாருக்கு மட்டுமே உதவும் சிறுமை புத்தி கிடையாது. எல்லாரும் மனித குலம் என்று விளக்கும் நல்ல கொள்கை இந்து மதத்தில் உள்ளது.

எனினும், எல்லாத் தெய்வங்களையும் செயல்படுத்தும் அந்த ஒரே கடவுளை வணங்கும் பழக்கம்தான் உண்மையில் தமிழர் பண்பாடாகும். குலதெய்வம், காவல் தெய்வம், எனப் பல தெய்வங்களை மதிக்கிறோம், துதிக்கிறோம் என்றாலும், எல்லாவற்றுக்கும் மேலான சிவனை மட்டுமே வணங்குதல் போதும் என்ற கொள்கை நம் தமிழரால் பின்பற்றப்பட்டு வந்ததை வரலாறு சொல்லும்.
மற்ற தெய்வங்கள் உலக வாழ்க்கைக்கு உதவினாலும் மேல் உலகிற்குச் செல்லும்போது அருள் பெறவும், முக்தி அடையவும் சிவபெருமானை மட்டும் வணங்கினால் போதும் என்றுதான் தமிழர் மதம் கற்பிக்கிறது. அவ்வாறு வழிபடவும் ஒரு பக்குவம் வேண்டும். இறைவனின் அருள் இருக்கவேண்டும்.  மற்ற தெய்வங்களை வணங்குபவர், அவற்றின் அருளைப் பெறும்போது, அவை அவரைச் சிவனிடம் கொண்டு சேர்க்க உதவும்.  எனவேதான், நாங்கள் உங்களைப்போல, மற்ற மதத்தாரைப் பார்த்துப் புலம்புவதில்லை. மற்ற மதங்களை அழிக்கவோ, மக்களை மதம் மாற்றி, பல குடும்பங்களைக் குலைக்கவோ செய்வதில்லை. அவரவருக்குரிய பக்குவம் வரட்டும் என்றெண்ணி அமைதியாக இருக்கிறோம்.

திருமந்திரம் ’தேவன்’ என்று மகாதேவனாகிய சிவனைக் குறிப்பிடுகிறது.
ஆனால் தேவர்கள் என்றும் இமையோர் என்றும் திருக்குறளில் சொல்லப்படும் உயர்ந்த சக்தியுடைய வானோர்கள் (celestial beings) எண்ணிக்கையில் அதிகம்.  அந்த வானோர்களில் சிலர் பூமியில் பிறந்து மக்களுக்கிடையே வாழ்ந்து, தங்கள் வினை தீர்ந்ததும் மீண்டும் வானுலகம் செல்வர். அவர்களால் பயன் பெற்ற மக்கள் அவர்களையே தங்கள் தெய்வமாக ஏற்று வழிபடுவதும் உண்டு. ஏசு கிறிஸ்துவையும் இந்த வகையைச் சேர்ந்தவர் என்று நாங்கள் கருதுவதால் அவரையும் மதிக்கிறோம். எனினும், இத்தகைய தெய்வங்களின் சக்தி ஓரளவுதான் என்பதும் பரம்பொருளின் சக்தி மட்டுமே அளவில்லாதது என்பதும் உணரத்தக்கது.
இதுதான் சிறந்த விளக்கம். உலகம் முழுவதற்கும் பொருந்தும் விளக்கம் இதுவே.

நீங்கள், உங்கள் கடவுள்தான் உலகத்தைக் காப்பார் என்று சொல்கிறீர்கள். ஆனால், அவர் உங்கள் சமயத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே காப்பார் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், மற்ற சமயங்களைச் சார்ந்தவர்களை யார் காக்கிறார்கள்? அவர் உலக முழுவதற்கும் பொறுப்பு வகிக்கவில்லையா? உங்கள் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே?
ஒரு கடவுள், பல தெய்வம் என்பது மட்டும்தான் இங்கு அறிவுபூர்வமான விளக்கமாக அமைகிறது. 

மதமாற்றி: மௌனம்

சாத்தான்
மதமாற்றி:
எங்கள் கடவுள் மட்டுமே இறைவன் ஆவார். மற்ற மத தெய்வங்கள் எல்லாம் சாத்தான்கள். பிசாசுகள்.

நான்:
அப்படித்தான் உங்கள் மத நூல் கூறுகிறதா? அவ்வாறெனில் நான் உங்களுக்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் அந்தக் கூற்று ரொம்பக் கோளாறானது. நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

1)               தன் மதத்துக் கடவுள்  மட்டுமே நல்லவர் , மற்றவர் எல்லாமே பிசாசுகள் என்பது வெறுப்புணர்வைத் தூண்டும் கொள்கையாகும். இதனால், மக்களுக்கு நல்லெண்ணம் வராது. பகையும் சண்டையும்தான் வளரும். இது உலகத்துக்கு நல்லதா? இதே போல மற்ற மதத்துக்கார்கள் உங்கள் கடவுளைச் சாத்தான் என்று சொல்லும்போது,  அது உங்கள் மனத்தைப் புண்படுத்தவில்லையா? ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மை?
2)               ஒரே இறைவனை வணங்குகிறோம் என்று சொல்லும் நீங்கள் அந்த ஓர் இறைவன், இந்த உலகைப் படைத்தார் என்கிறீர்கள். பிறகு ஏன் அவர் படைத்த உலகில் உங்களுக்குப் பிடிக்காத மதங்களை வளர விட்டிருக்கிறார்?
3)  கிறிஸ்தவக் கடவுளை மட்டும் வணங்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் கடவுளால் போராடி ஜெயிக்க முடியாத அளவுக்கு அவரைவிடச் சாத்தான் சக்தி வாய்ந்ததா? விளக்கம் கூறுங்கள்.

மதமாற்றி:
சாத்தான் தான் நம் சிந்தனையைத் தீய வழியில் திருப்புகிறவன். நம்மைப் பாவம் செய்யத் தூண்டுபவன்.

நான்:
கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்கப்பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால் நரகத்திற்குத் தள்ளப்பட்டான் என்று நம்பப்படுகிறது.  அப்படித்தானே? கடவுளால் உருவாக்கப்பட்ட ஒருவனால், எப்படி கடவுளை விடப் பெரியவனாகி அவருக்குக் கீழ்ப்படிய மறுக்க முடிந்து? அப்படிப்பட்டவனை தன்வழிக்கு வருமாறு மாற்றியமைக்க ஏன் உங்கள் கடவுளால் முடியவில்லை? அந்த அளவு திறமையில்லாதவரா அவர்? மேலும், நரகத்தில் தள்ளப்பட்ட சாத்தான், எப்படி உலகில் உள்ள மக்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை உண்டாக்குகிறான்? ஒன்றும் தெளிவாக இல்லையே?

மதமாற்றி : மௌனம்

நான்:
மாறாக, தமிழர் சமயத்தில் எல்லாமே தெளிவாக உள்ளது.

கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ள தேவர்கள், உயர் ஆன்மாக்கள், (தேவதூதர்கள்) ஏதேனும் காரணத்துக்காக உலகில் பிறப்பெடுக்கலாம். (எ.கா. சுந்தரர்) அந்தச் சமயத்தில் அவர்கள் பாவங்கள் புரிந்தால், அதற்கும் அவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். அவர்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியது இல்லை. இவன் சாத்தான், அவன் சாத்தான் என்று புலம்ப வேண்டியதும் இல்லை. இறைவனை வழிபட்டால் போதும். சிவ சிவ என்று நமச்சிவாய மந்திரத்தை ஜெபித்தாலே போதும். எல்லாத் தீய சக்திகளும் மறைந்து விடும். இது அனுபவ உண்மை.
 செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்” என்பது தேவார  வரி.

5)         சாத்தான் என்று யாராவது ஒருவர் வந்து மக்கள் மனத்தைத் தீய வழியில் திருப்புவது கிடையாது. நம் சிந்தனைக்கெல்லாம் நம் பாவ புன்ணியங்களே காரணமாகும். நம் மனத்துக்கு நாமே அதிபதி. மனம் சீரான வழியில் செல்லப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படியே நீங்கள் சொல்வதுபோல், ஏதேனும் ஒரு தீய ஆவியோ ஆன்மாவோ கூட இருந்து தீயனவற்றைச் செய்யத் தூண்டினால், அப்போது கெட்ட புத்தியைக் கடிவாளம் போல் இழுக்க இறை வழிபாடு உதவும் என்பது தமிழர் மதம். ’அஞ்சுவது யாதொன்றும் இல்லை’ என்பதும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்பதும் தேவார வரிகள். ஆகவே, நாங்கள் எந்த சாத்தானுக்கும் அஞ்சுவது கிடையாது.  சிவ வழிபாடு எங்களுக்குத் துணிவைத் தருகிறது. இறைவனை வணங்குவது ஒன்றே எங்களை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.

6)         சாத்தானின் ஆட்சியினால், பாசாங்கும் பொய்யும், போர்களும், இம்சையும் நாசமும், குற்றச்செயலும் பேராசையும் ஊழலுமே விளைவடைகின்றன என்று பைபிள் கூறுகிறது. கலியுகத்தில் கலி முற்றும்போது குற்றங்கள் பெருகும் என்று இந்து சமயத்தில் கூறப்படுகிறது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையைக் கவனியுங்கள். இறைவன் ஆணையால், காலத்தின் கட்டாயமாகச் சில காரியங்கள் நடக்கும். இதில் மதம் மாறுவதால் என்ன நன்மை? சொல்லுங்கள். எல்லா மக்களும் ஒரே உலகில் தானே வாழ்கிறார்கள்?

7)         கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கடவுள் துணையிருப்பார் என்றும் மற்றவர்கள் எல்லாரும் சாத்தானிடம் சிக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கடவுள் வழிகாட்டி வரவேண்டுமே; வருகிறாரா?
அவ்வாறெனின், தேவாலயங்களில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்சினையாகக் கிளம்பியிருப்பது ஏன்? சாத்தான் அங்கு ஆட்சி புரிகிறானா? பதில் சொல்லுங்கள்.

8)         கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இறைவன் அருளால் நல்லெண்ணம் வந்து சேர்கிறதா? அவர்கள் மட்டும் பாவம் செய்யாமல் இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு மட்டும் துன்பம் வராமல் இருக்கிறதா? எத்தனை போர்களில் கிறிஸ்தவர்கள் கடும் துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள்?  எத்தனை குண்டு வெடிப்புகளில் உயிரிழந்திருக்கிறார்கள்? ஏன் அவர்களை அவர்களின் மதம் காப்பாற்றவில்லை?  எத்தனை விபத்துகள், சிறைத் தண்டனைகள், நோய் நொடிகள், மரணங்கள், கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகள், நிலநடுக்கம், சூறாவளி,சுனாமி, மற்ற இயற்கைப் பேரிடர்கள்… எல்லாவற்றையும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கத் தானே செய்கிறார்கள்? உலகச் செய்திகளை நாம் படிக்கவில்லையா?

9) கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் எனக்கு நல்லது நடக்கும் என்று சொல்லும் நீங்கள் இதற்குப் பதில் கூறுங்கள்.
கோடிக்கணக்கான இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் இன்ன பிற மத்தினர், சீரான வாழ்வு வாழ்ந்து முடித்திருக்கிறார்களே! உங்கள் மதத்துக்கு மாறாமலேயே அவர்களுக்கு நல்வாழ்வு எவ்வாறு கிட்டியது? பதில் கூறுங்கள்.

மதமாற்றி: (மௌனம்)

ஆகவே, மனிதரின் செயலெல்லாம் சாத்தான் செயல் எனும் கூற்று தவறானது. பாவ புண்ணியக் கணக்குத்தான் ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கும் என்கின்ற தமிழர் நம்பிக்கைதான் சரியானது.  எல்லாச் சமய மக்களின் வாழ்க்கையோடும் பொருந்துகின்ற உன்னதமான விளக்கம் இது.  உலக மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும் கொள்கை அதுவே. ஏனெனில் அத்தனை சமயத்தைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையிலும் பாவ புண்ணியப் பலன்கள் இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
மேலும், மற்ற பல தெய்வங்கள் காலங்காலமாக மக்களுக்கு நன்மை செய்து வந்துள்ளதை மறுக்க இயலாது. பிறரின் அனுபவங்களை இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? மற்றவர்கள் காலம் காலமாக வணங்கி வழிபட்டு வரும் தெய்வங்கள் உண்மையிலேயே கெட்ட சக்திகள் என்றால் ஏன் உங்களுடைய சக்தி வாய்ந்த கடவுள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்திருக்கிறார் என்று உங்களால் ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா?

ஓர் எடுத்துக்காட்டு: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் சிவபெருமானை வணங்கி வருகின்றனர். சைவ சித்தாந்த சர்ச் என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி வெள்ளைக்காரர்கள் பலர் உருகிப் போகிறார்களே , அதனை ஏன் உங்கள் கடவுள் தடுக்கவில்லை? முருகப்பெருமானின் கருணையை வியந்து எத்தனையோ சீனர்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தைப்பூசத்தன்று காவடி தூக்குகிறார்களே, அது ஏன்? இஷா யோகா மையத்திலும் வேறு பல இந்து சமயச் சங்கங்களிலும்  நாடு, மொழி, இன வேறுபாடின்றி உலக மக்கள் பலர் சேர்ந்து மகிழ்கிறார்களே, அதை ஏன் உங்கள் கடவுள் தடுக்கவில்லை?  அனைத்தையும் சாத்தான் செய்கிறான் என்கிறீர்களா? அவ்வாறெனில், அந்த சாத்தான் மக்கள் மனத்தில் பக்தியை விளைவித்து அவர்களுக்கு  நன்மை புரியும் சிறந்த சக்தி என்று நீங்களே புகழாரம் சூட்டுவதாகும். சரிதானா? இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

மதமாற்றி: (மௌனம்)

சுவைக் குறிப்பு:
தமிழில் சாத்தான் அல்லது சாத்தன் என்பது ஒரு சிறு தெய்வத்தைக் குறிக்கும் சொல்.  அது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உண்டு. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர்.

வழிபாடு குறித்து யாரும் சொல்லித் தரவில்லை
அண்மையில் மதம் மாறியவர்:
நிறைய தெய்வங்களும் தேவதைகளும் குலதெய்வங்களும் இருப்பதால் இந்து சமயத்தில் போட்டித் தன்மை அதிகமாக இருக்கிறது.  சைவம், வைணவம், சாக்தம் போன்ற பல்வேறு பிரிவுகளும் இருப்பதால் ஒரே குழப்பம். யாரைக் கும்பிட்டால் பலன் கிடைக்கும் என்று தெளிவான வழிகாட்டுதல் இல்லை. ஆயிரக்கணக்கான தெய்வங்கள் இருப்பதால் எல்லாரையும் கும்பிட்டுக்கொண்டு இருக்க முடியுமா?  (Focus) ஒரே சிந்தனை கிடையாது. எந்தக் கடவுள் உயர்வு என்று ஒரே பிரச்சினை.  ஆனால் கிறிஸ்தவ மதத்தில்  மிகத் தெளிவான வழிகாட்டல் இருப்பதாகத் தெரிந்தது.  அதனால்தான் மதம் மாறினேன்.

நான்:
என் பதிலை இரு பகுதியாகத் தருகிறேன்:

பகுதி 1:
கிறிஸ்தவ மதத்தில் பிரிவுகள் இல்லாத தெளிவு உண்டு என்பதை நான் நம்ப மறுக்கிறேன். ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பிரிவை மிகவும் தாக்கிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இணையப் பக்கங்களில் கண்டும் வருகிறேன். இவையெல்லாம் நடக்கக் காரணம் என்ன? என் மதப்பிரிவு மட்டுமே நல்லது என்ற குறுகிய மனப்பான்மை அல்லவா?
நான் கண்ட சில எடுத்துக்காட்டுகள்:
ஒரு கிறிஸ்தவ நண்பரும் அவர் மனைவியும் வெவ்வேறு தேவாலயங்களில் உறுப்பினர்கள். திருமணத்துக்குப் பின் எந்தச் சபைக்கு மாதாந்திரக் கட்டணம் செலுத்துவது என்பதில் பிரச்சினை மூண்டு குடும்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது.
ஒரு கிறிஸ்தவக் கல்வி நிலையத்தில் படிக்க வந்த ஓர் ஐரோப்பியக் கிறிஸ்தவ  மாணவரைப் பிரிவு மாறச் சொல்லி, அதாவது கத்தோலிக்கப் பிரிவிலிருந்து ஏங்கிலிக்கன் பிரிவுக்கு மாறச் சொல்லிப் பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதால் அவர் பள்ளியை விட்டு விலகி விட்டார்.
ஏசுநாதர் என்பவர் உண்மையில் கடவுளின் அவதாரமா அல்லது கடவுளின் மகனா, அல்லது இரண்டும் இல்லாத வேறொரு மனிதனா என்பதில் இன்று வரையில் பெரும் குழப்பம் நிலவுவதை யூடியூப் இணைய மேடை விவாதங்கள் காட்டுகின்றன! தவிர, ஏசுநாதரின் பிறப்பு, வாழ்வு, மரணம் ஆகியவை குறித்த மாறுபட்ட கருத்துகள் உள்ளன. டிசம்பர் மாத 25-ஆம் நாளை ஏசுநாதரின் பிறந்தநாளாகக் கருதிக் கொண்டாடி வரும் வேளையில் அது அவரது பிறந்தநாள் இல்லை என்று பல ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் கூறி வருவதை நாம் அறிவோமல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக, கிறிஸ்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் பைபிள் என்பதே பல்லாண்டு காலம் மாற்றப்பட்டு வந்துள்ளது என்றும், பல உண்மைகள் திரித்து எழுதப்பட்டவை என்றும் ஒரு விவாதம் நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் கிறிஸ்தவ மதம் மிகத் தெளிவான வழி காட்டுகிறது என்று எவ்வாறு சொல்ல முடியும்? அந்த மதத்தில் இருக்கின்ற பல வழிகளில் ஏதேனும் ஒரு வழியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமே உண்மை. 

பகுதி 2:
தமிழரின் சமயம் மிகத் தெளிவாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது. எனினும், அதைத் தமிழர்கள் முறையாக் கடைப்பிடிக்காத நிலையும் இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்நியப் படையெடுப்புகளால் மக்களின் மத்தில் விதைக்கப்பட்ட நச்சு முக்கிய காரணம். தாழ்வு மனப்பான்மையால் தன் மதத்தைக் கைவிட்டவர்கள் பலர். அந்நிய மற்றும் துரோகிகளின் சூழ்ச்சியால், ஆரியம், நாத்திகம் உட்பட்ட பல்வேறு கொள்கைகளைத் தமிழ் மரபில் திணித்ததன் விளைவாக மக்களின் கவனம் சிதறிவிட்டது. வெளிச் சமயங்களையும் புராணக் கதைகளையும் உட்புகுத்தி, பல குழப்பங்களை உருவாக்கி, தமிழர் மதம் என ஒன்று உண்டோ இல்லையோ என்ற ஐயத்தை உருவாக்கிய அரசியல் சதி முக்கிய காரணமாக வரலாற்றில் காணப்படுகிறது. ஆரியர், சாக்கியர், சமணர் முதற்கொண்டு இசுலாமியர், கிறிஸ்தவர் வரை, பல்வேறு மதவாதிகள் தமிழ் நாட்டில் ஊடுருவி, ஆரம்பத்தில் தமிழரிடம் நிலவிய சைவநெறியை அழிக்க முனைந்ததன் விளைவாக, இப்போது பலருக்கும் தம் சொந்த சமயத்தைப் பற்றிய விவரம் தெரியாமல் போய்விட்து. ஆனால், இறைவன் அருளால், தற்போது, மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. சைவ சமயப் பேரவைகளும், திருமுறை வளர்க்கும் அமைப்புகளும் உலகம் முழுதும் தமிழர் மதம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் உங்களுக்குச் சரியான வழிகாட்டல் வேண்டுமென்றால், அதற்கு உதவக் கூடியவை திருமுறைகளும் திருக்குறளுமே. இணையத்தில் தேடிப் பார்த்தாலே உண்மை தெரியுமே!
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விவரம் தெரியாதவர்கள் மதம் மாறியிருக்கலாம்.  இப்போது அந்த அவசியமே இல்லையே. அந்நிய மதத்தைக் கற்றுக் கொள்ளச் செலவிடும் முனைப்பில் நூற்றில் ஒரு பங்கு முனைப்பை உங்கள் சொந்தப் பாரம்பரியத்தை அறிவதில் காட்டினால் போதும்.  குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும்.
தமிழ் மக்கள் தங்கள் வேர்களை மதிக்கக் கற்றுக்கொண்டு வருகின்றனர். திருமுறைகளைப் படிக்க முற்படுகின்றனர்.  நீங்களும் படியுங்கள். நீங்கள் உங்கள் சொந்தப் பண்பாட்டை அறியாதபோது உங்களை உலகம் எப்படி மதிக்கும்? பாரம்பரிய அடையாளமே தன்மான அடையாளமாகும்.

அற்புதங்கள் நிகழ்த்துதல்
மதமாற்றி:
ஏசுநாதர் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதனால் அவரைத்தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நான்:
ஏசுநாதர் மட்டுமா அதிசயங்கள் நிகழ்த்தினார்? முகம்மது நபியும்தான் நிகழ்த்தினார் என்று முஸ்லிம் நண்பர்கள் கூறுகின்றனர். அதிசயங்கள் நிகழ்த்துபவர் அனைவருமே சிறந்தவர்கள்தான்.
எனினும், நான் தமிழர் என்பதாலும், தமிழ் இனம், ஏசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே முன்னேறிய பண்பாட்டைக் கொண்டிருந்தது என்பதாலும்  நான் தமிழ் இனத்தில் தோன்றிய ஞானிகளின் அதிசயங்களையே அதிகம் போற்ற விரும்புகிறேன்.  வியக்கத்தக்க வகையில் அதிசயம் நிகழ்த்திய இறைத்தூதர்களும் முனிவர்களும் அருளாளர்களும் தமிழ்க் குலத்தில்   நிறைய பேர் உள்ளனர். சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

1)                 சொற்றுணை வேதியன்’ என்று தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் (அப்பர் அடிகள்) ஓர் அதிசயப் பிறவி. அவரது பெருமையைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் அவரைக் கல்லில் கட்டிக் கடலில் வீசினர். ஆனால், கல் கடலில் மிதந்தது.
அப்பூதி அடிகளின் மகன் பாம்பு தீண்டி விழுந்தவனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்தவர் திருநாவுக்கரசர். இன்றும் எந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல் தடுப்பதற்கு ஓத வேண்டிய திருப்பதிகம் அது. அப்பர் அடிகளாரின் வாயில் பிறந்த மந்திரப் பதிகங்களைப் பாடினால் நல்ல பலன் கிட்டும் என்பதை இன்றும் பலர் அனுபவபூர்வமாக அறிந்துள்ளனர்.

2)                 தோடுடைய செவியன்’ என்று தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர் பிறக்கும்போதே அதிசயம் நிகழ்த்தியவர். அவர் சீர்காழியில் அவதாரம் செய்த நேரத்தில் அந்நகரில் இருந்த அத்தனை பேருக்கும் உடல் சிலிர்த்து, இனம்புரியா ஓர் இன்ப வெள்ளம் சிந்தையில் தோன்றிப் பேரின்பத்தில் ஆழ்த்தியது.
இறந்த பெண்ணை உயிர்ப்பித்துத் தந்தவர் அவர்.  எலும்பு பெண்ணாக மாறிய அதிசய நிகழ்வின் வரலாறு தெளிவாக உள்ளது.

ஆகவே, அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வீகத்தன்மை கொண்ட பலர் இந்த பூமியில் பிறந்திருக்கிறார்கள் என்பதை உணருங்கள். உலகில் ஒருவர் மட்டுமே அந்தப் பெருமையைப் பெறவில்லை. உலக முழுவதும் அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றாலும், நாம் தமிழ் மரபணுக்களைக் கொண்டவர்கள் என்பதால், நம் இனத்தில் தோன்றி அதிசயம் செய்த அருளாளர்களை முதலில் அறிந்து போற்றுவதே நமக்குப் பெருமை. ஏசுநாதர் வரலாறு இன்னமும் தெளிவில்லாத நிலையில் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.  மாறாக, தமிழ் அருளாளர்களின் பிறப்பு, வாழ்க்கை, சிறப்பு போன்றவை குறித்த தெளிவான வரலாறு இன்னமும் கல்வெட்டுகளாகவும், கோவில் சிற்பங்களாகவும், ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த பாடல்களாவும் நிலைபெற்றுள்ளன. எனவே, தமிழ்த் தெய்வீக அவதாரங்களை அறிந்து,  அந்த அருளாளர்களின் பதிகங்களைப் பாடி, அவர்களின் ஆசியோடு நாம் விரும்பியதைப் பெற்று நல்வாழ்வு வாழலாம். 

மதமாற்றி: (மௌனம்)

ஜாதி வேறுபாடு

மதமாற்றி:
இந்து மதத்தில் ஜாதி வேறுபாடு உள்ளது. எங்களைத் தாழ்ந்த ஜாதி என்று பேசியதால் நாங்கள் மதம் மாறிவிட்டோம்.

நான்:
ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைத் தாழ்த்திப் பேசுவது இயற்கை. இது அறியாமையால் வருவது. மதத்தால் வருவதில்லை.  உலகின் எல்லாச் சமயங்களிலும் உயர்வு தாழ்வு காணும் போக்கு உள்ளது.
எடுத்துக்காட்டுக்கு, கேரளாவில் நிகழ்ந்த ஜாதிக் கொலைச் சம்பவம். காதலித்த ஆணும் பென்ணும் கிறிஸ்தவர்கள்தான். ஆனால், பையன் தாழ்ந்த ஜாதி என்று சொல்லிப் பெண்ணின் தந்தை அவனைக் கொலை செய்துவிட்டார். 
உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி ஏன் கிறிஸ்தவ மதத்தை விட்டு விலகினார்? அவர் கிறிஸ்தவராக இருந்தபோது வெள்ளைக் கிறிஸ்தவர்கள் அவரை மதிக்கவில்லை. ஏன் அவரது ஜாதியை அவர்கள் இழிவுபடுத்தினர்? இஸ்லாமிய நாடுகளில் ஒரு பிரிவு மக்கள் மற்ற பிரிவு மக்களைத் தாழ்ந்த ஜாதியாகக் கருதுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிக்கடி செய்திகளில் வெளிவருவதைக் காண்கிறோம். இவை எல்லாமே மனிதரின் ஆணவப் போக்கினால் நிகழ்வதுதான். மதம் மாறுவதால் தாழ்வுபடுத்தும் போக்கு மறைந்துவிடும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். வேற்றினத்தவர் யாராவது உங்களைக் கிலிங் கியா என்று சொல்லித் தாழ்த்திப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் ஓர் இந்தியனே கிடையாது. இன்று முதல் நான் சீனர் என்று சொல்லி ’இனம் மாறி’விடுவீர்களா?  அல்லது சொன்னவனுக்குப் பாடம் புகட்டும் வண்ணம் உங்களின் சிறப்பை உயர்த்திக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பீர்களா? சிந்தியுங்கள்.

யாராவது உங்கள் குலத்தைத் தாழ்த்திப் பேசினால், அவர்களுப் பதிலடி தர வேண்டியது உங்கள் கடமை. ’பிறரைத் தாழ்த்திப் பேசும் நீதானப்பா தாழ்ந்த ஜாதி. எல்லாரையும் ஒரே போல மதிக்கும் நான் தானடா உயர்ந்த குலத்தினன்’ என்று மார்தட்டிச் சொல்ல வேண்டும்.  அதைச் சொல்லவிடாமல் தடுப்பது உங்கள் தாழ்வு மனப்பான்மைதானே தவிர, தமிழர் சமயத்தில் எந்தக் குறையும் இல்லை.
இதற்குக் காரணம் உங்களுக்குச் சமய அறிவு போதாது என்பதுதான்.  நீங்கள் உங்கள் சொந்தச் சமயத்தை ஒழுங்காகப் படித்து அறிந்திருந்தால் இந்தத் தாழ்வு மனப்பான்மை வராது. தன்னம்பிக்கை வந்திருக்கும்.

மதமாற்றி:
ஆனால் இந்து சமயத்தில்தானே நாலு வர்ணமும் ஜாதி உயர்வு தாழ்வும் உள்ளது?

நான்:
நிச்சயமாகக் கிடையாது. நாலு வர்ணம் என்பதும் குலத்தால் உயர்வு தாழ்வு பார்ப்பதும் தமிழர் மரபு அல்ல. அது ஆரியர் பழக்கம். தமிழரின் சாதிகள் நாலு வகை அல்ல. ஆயிரக்கணக்கான சாதிகள் உண்டு. அவை குலமரபுகள். இடத்தையும் குலதெய்வத்தையும் பரம்பரையையும் அடிப்படையாகக் கொண்டவை தமிழ் சாதிகள்.  எனவே இருவகைச் சிந்தனைகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.  இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் கிடையாது! அடிப்படை நம்பிக்கைகள் ஒரேபோன்று இருப்பதால், எல்லாருக்கும் பொதுவாக இந்து மதம் என்று சொன்னாலும், உண்மையில் தமிழரின் சைவ நெறிச் சமயம், வடக்குப் பக்கம் வளர்ந்த வைதீக மதத்தினின்று வெகுவாக வேறுபட்டது. எனவே, பொத்தாம்பொதுவாகச் சொல்லக்கூடாது.  மற்ற பண்பாடுகளின் தாக்கத்தால் ஜாதி உயர்வு தாழ்வு பார்க்கத் தொடங்கிய தமிழ் மக்களிடம், அவ்வாறு செய்யாதீர்கள் என்று அறிவுறுத்துவதுதான் தமிழர் மதம். சிவநெறியை நமக்கு உணர்த்தும் நூல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பாருங்கள்:

”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” – திருமூலரின் திருமந்திரம்
”சாதி இரண்டொழிய வேறில்லை” – ஔவையார்.
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – திருக்குறள்

முக்கியமாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம்:
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே
இந்தப் பாடலின் பொருள் : சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.

ஆகவே, சிவ சிந்தனை ஒன்று மட்டும் இருந்தால் போதும்; அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசும் கெட்ட குணம் மறைந்தே போகும் என்பதை உணருங்கள்.

யாராவது  உங்கள் குலத்தைக் கேலி செய்தால், அவர்களிடம் அறிவு பூர்வமாகப் பேசுங்கள். உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். அதாவது…

”தமிழர் சமயத்தில் சாதி உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. எல்லாரும் ஆன்மாக்களே.  மாயையினால் இந்தப் பிறவியில் நாம் கொண்டுள்ள உடல் முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அமைந்தது. இதில் கர்வம் எதற்கு? அடுத்த பிறவியில் எந்தக் குலத்தில் வேண்டுமானாலும் பிறக்கலாம். நம் இதிகாசங்களைப் படியுங்கள்.  குலத் தாழ்ச்சி உயர்ச்சி பேசினால் உங்களுக்குப் பக்குவம் போதவில்லை என்று அர்த்தம். ”  என்று பேசுங்கள்.

அதை விடுத்து, வேற்று மதத்துக்கு மாறிப்போவதால் உங்கள் பிறப்பு மாறாது. கூடுதல் மதிப்பு எதுவும் கிடைக்காது. உங்கள் பிறப்பை நீங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் நிலைதான் மிஞ்சும்.  உலகமே மதிக்கும் நல்ல சிவநெறி நமக்கு இருக்கையில் எதற்குத் தாழ்வு மனப்பான்மை? முடிந்தால் ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பாருங்கள். சரியா?

மதமாற்றி: மௌனம்


சிலை வழிபாடு
மதமாற்றி:
இந்துக்கள் சிலைகளை வழிபடுகிறார்கள். அது அவ்வளவு அறிவுபூர்வமாகத் தெரியவில்லை.

நான்:
சிலைகளை யாரும் வழிபடுவதில்லை. அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை அங்கு வாழும் எந்த இந்துவாவது வழிபட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது மாமல்லபுரச் சிற்பங்களை யாராவது கும்பிடுகிறார்களா? பொதுவாகச் சிலைகளும் பொம்மைகளும் கலை வடிவங்கள் மட்டுமே. வணங்குவதற்கு உரியவை அல்ல.

ஆனால், கோவிலிலும் வீட்டிலும் தெய்வச்சிலைகளை உருவேற்றும்போது, அங்கு தெய்வ சக்தி வந்து நிற்கும். அண்ட வெளியிலும் ஆகாயத்திலும் மட்டுமின்றி நம் அருகிலும் கூட பல்வேறு தேவதைகளும் உயர் ஆன்மாக்களும் இருக்கலாம். நம் குல தெய்வம், நம் குருமார்கள் மட்டுமின்றி அவர்களை விட உயர்ந்த தெய்வங்களும் ஏன், அந்தப் பரம்பொருளான சிவபெருமானும்கூட வரலாம், அல்லது, தன் தேவ கணங்களை அனுப்பிவைக்கலாம். அந்த தெய்வங்கள் சிலைகளில் வந்து அமர்ந்துகொள்ளும். இது மிகப் பெரிய நுணுக்கமான இறை ஈர்ப்பு முறை.  இதைக் குறை சொல்லும் மாற்று மதத்தாரிடம் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

உங்கள் புனித நூலை எரித்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அது வெறும் தாள்தானே? எத்தனையோ தாட்களைக் கிழித்துப் போடுவது போல் உங்கள் சமய நூலைக் கிழித்துப் போட ஏன் மனம் வரவில்லை? காரணம், அந்த நூலை எழுதிய உங்கள் சமயத் தலைவர் மீது உள்ள மரியாதை அல்லவா? அச்சகத்திற்குச் செல்லும் வரை சாதாரணத் தாளாக இருந்தது! உங்கள் சமய வாசகங்களை அச்சிட்டதும், அந்தத் தாளும் அதிலிருக்கும் ரசாயன மையும் திடீரென்று முக்கியமாகி விட்டது வினோதமாக இல்லையா?  யோசித்துப் பாருங்கள். நீங்கள் தாளைக் கும்பிடுகிறீர்களா? அல்லது அதிலுள்ள மையைப் போற்றுகிறீர்களா? தாளிலும் மையிலும் எப்படி இறைத்தன்மை வந்து நிற்கும்?
உண்மையில் தாளும் மையும் முக்கியமில்லை. அதன் பின்னணியில் உள்ள தெய்வ சிந்தனைதான் இங்கு முக்கியம் என்பீர்கள், இல்லையா? 
.    
அதுபோல, சிலை செய்யப்பட்ட கல்லை யாரும் வணங்குவதில்லை. சிலையில் வந்து சேரும் தெய்வத்தைத்தான் வணங்குகின்றனர். கற்சிலை மட்டுமில்லை. வெறும் மஞ்சளை எடுத்துக் குழைத்துப் பிடித்துப் பிள்ளையார் என்பார்கள். அங்கு கணபதி வந்து நிற்பார், நம் கண்களுக்குத் தெரியாமலேயே! சில சமயம் அதுவும் கூடத் தேவையில்லை. எந்தப் பொருளும் இல்லாமலேயே, மனக்கண்ணில் இறைவனைக் காண முடியும்.
இறைவன் உருவமாகவும் தோன்றலாம், இறைத் தூதர்கள் எனப்படும் சில அவதாரங்கள் மூலமும் அருளலாம். (இதைச் சிவோகம் என்பர்).

‘உருவும் அருவும் உருவோடருவும்
மருவு பரசிவன் மன் பல்லுயிர்க்குங்
குருவு மென நிற்குங் கொள்கையனாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன் தானே’’(திருமந்திரம் 1763- ஆம் பாடல்.)

பொருள்:
உருவ வழிபாடு கொண்டும் இறைவனை அறியலாம். இறைவனை உருவமே இல்லாத நிலையிலும் உணர்ந்து அருள்பெறலாம். உருவம் இருந்தும் இல்லாததான ஒளி வடிவிலும் சிவலிங்க வடிவிலும் கூட இறைவனைக் காணலாம். இறைவன் உலகின் எல்லா உயிர்க்கும் பொறுப்பானவன். குருவாக வந்து அல்லது குருவின் மூலமாகவும் இறைவன் அருள் புரிவான்.

இந்த ஒரு பாடலின் மூலம், உலகின் எல்லா விதச் சமயங்களின் வழிபாட்டு நம்பிக்கைகளையும் ஒட்டு மொத்தமாகத் திருமூலர் விளக்கிவிட்டார். அத்தனை முறைகளும் சிவனின் அருளால் நல்கப்படுபவை என்று கூறுகிறார். இதுவே தமிழர் பண்பாடு. உருவ வழிபாடு உன்னதமானது!

மதமாற்ற நோக்கம் கொண்ட ஒரு கூட்டம், தமிழ் நாட்டை ஆக்கிரமித்தபோது, தமிழரின் இறை வழிபாட்டைச் சிலை வழிபாடு என்று சொல்லிக் கேவலப்படுத்தியது. சிவலிங்கம் என்பது, சிவபெருமானின் சதாசிவ நிலையின் வடிவமாகும். அது   அணுவின் இயக்கத்தைக் குறிப்பது. ஆனால், வெள்ளைக்காரர்கள், நம் தமிழ்ப் பெருமையைக் குலைப்பதற்காக, அதனை ஆண் உறுப்பென்று கதை கட்டினார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க அக்காலத்தில் நாதியில்லாமல் போயிருக்கலாம். ஆனால், இன்று யாராலும் அவ்வாறு பேச இயலாது. ஏனெனில், ’தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்னும் திருமந்திர வரியை அறிந்துள்ள தமிழர்கள் அத்தகையோர்க்குப் பதிலடி கொடுத்துவிடுவார்கள்.

சிலைகள், இறைவனை அடைய வழிபாடு நடத்த உதவும் சிறந்த முறையாகத் தமிழர்களால் காலங்காலமாகப் பயன்பட்டு வந்துள்ளன. அதிலும் முக்கியமாக, சிவலிங்கம், இறைவனின் சக்தி வெளிப்பாடாக, உலகில் பல்வேறு இடங்களில் தோன்றியது. 

இதனை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. 
மஞ்சளின் மகிமையையும் வேப்பிலையின் மருத்துவக் குணத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்து வாழ்க்கை முறையாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள். ஆனால் அவற்றை அண்மையில்தான் அறிந்தனர் ஐரோப்பியர்.

ஐரோப்பாவில் 16-ஆம் நூற்றாண்டில், உலகம் உருண்டையானது என்று எடுத்துச் சொன்ன விஞ்ஞானி கலிலியோவை அன்றைய கிறிஸ்தவ மதவாதிகள் சிறையில் தள்ளினர். காரணம், அவர்களின் மத நூலாகிய பைபிலில் உலகம் நான்கு மூலை கொண்ட தட்டையானது என எழுதியிருந்ததைக் கலிலியோ எதிர்த்துவிட்டார் என்று அவர்களுக்குக் கோபம்!

ஆனால் அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில்  பின்வரும் வரிகள் இடம்பெற்றிருந்தன:

" அண்டைப் குதியின் உண்டைப் பிறக்கம்
 அளப்ருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

பாடலின் பொருள்:
உலகம் உருண்டை வடிவமானது. பிரபஞ்சத்தில் நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் தருகின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூடச் சிறியதாக மின்னுகின்றன.

இப்படித் தெளிவான அறிவியல் ஞானம் பெற்றிருந்த தமிழர்களின் ஆன்மீக சிந்தனை எவ்வளவு அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நம் பண்பாடுதான் மூத்தது. முக்கியமான உண்மைகளைக் கொண்டது. இதை ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்கள் உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டனர். ஆயிரக்கணக்கான  ஆராய்ச்சியாளர்கள் நம் தமிழர் சமயப் பெருமையை அறிந்து அதன் உண்மையை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்களும் உணருங்கள்.

மதமாற்றி:
மன்னிக்க வேண்டும். இனிமேல் நான் சொந்தப் பண்பாட்டைக் கற்றுக்கொள்ள முயல்வேன். அதன் முதற்படியாகத் திருமுறை வகுப்பில் சேர்வேன். நன்றி.


முடிவுரை:
கோவில்கள் சாத்தான்களின் கூடாரம் என்று ஒரு தமிழ்நாட்டு கிறிஸ்தவ போதகர் பேசிச் சர்ச்சைக்குள்ளான செய்தி நாம் அறிந்ததே. கோடிக்கணக்கான இந்துக்களுக்கு நன்மை அளித்து, நம் தமிழர் பெருமைக்குச் சான்றாக விளங்குபவை கோவில்கள்.  மற்ற மதத்தாரையும் கவர்ந்து வியக்கவைக்கும் சிறப்பு வாய்ந்த இக்கோவில்களை  இழித்துப் பேசும் ஈன புத்தி அந்தப் போதகருக்கு எவ்வாறு வந்தது? த்கைய குறுகிய மனப்பான்மையைத்தான் இவனது மதகுருக்கள் இவனுக்குக் கற்பித்தனரா என்று கேள்வி எழுகிறதல்லவா?
இதே போல ஒவ்வொருவரும் அடுத்த மதத்தைத் தாக்கிப் பேச முனைந்தால் என்னவாகும்? உலகம் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மதமாற்றும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
யாருக்கு எந்த மதம் வேண்டுமென்று அவரவர் முடிவுசெய்யட்டும். தன்மானம் உள்ள தமிழ் மக்கள் தங்கள் மொழிப் பெருமையையும் தமிழ்ச் சமயத்தின் மேன்மையையும் உணரட்டும்.
சிவ சிவ.


சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...