Sunday, January 11, 2009

தமிழ்ப் புத்தாண்டு


அன்புள்ள நேயர்களே,
தை முதல் நாள்! தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தமிழர் திருநாள் : இப்படி மூன்று பொருளில் சிறப்பு பெற்றுள்ள ஒரே நாள். இது குறித்து உங்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை இங்கு தந்திருக்கிறேன்.
இது குறித்த உங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களிடம் கேள்விகள் வேறு ஏதேனும் இருந்தால் அதனையும் இந்த வலைப்பதிவில் கேளுங்கள். முடிந்த அளவு பதிலளிக்கிறேன்.
நன்றி.
பொங்கல், புத்தாண்டு வாழ்த்துகளுடன்,
மீனாட்சி சபாபதி


1) தமிழ்ப் புத்தாண்டு நாள் எது? சித்திரை முதல் நாளா தை முதல் நாளா?

இரண்டு நாட்களுமே புத்தாண்டாக பல காலம் கொண்டாடப்பட்டு வருகின்றன. தை முதல் தேதி பொங்கல் எனும் அறுவடைத் திருநாளாக விளங்குகிறது. தமிழர் வாழ்வில் இது முக்கியமான புத்தாண்டாக விளங்குவதால் இந்த நாளை புதுத் துணி அணிந்து புதுப் பானையில் சோறு பொங்கி விழாவாகக் கொண்டாடுவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் புது வருடப் பழமொழியாகக் கொள்வர். மேலும், புத்தாண்டுக்கு ஏதுவாக பழையனவற்றைக் கழித்துக் கட்டும் செயல் பொங்கலுக்கு முதல் நாள் மேற்கொள்ளப்படும். வேண்டாதவற்றைப் போக்கி விடும் நாள் போகி எனப்படுகிறது. இது, புது வருடச் செயலாக பல்லாண்டு காலம் தமிழர் வாழ்வில் இருந்து வரும் பழக்கம்.

2) இதுதான் புத்தாண்டு என்றால், சித்திரை முதல் தேதி ஏன் தமிழ்ப் புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது?

சித்திரை மாதம் தொடங்கும் நாள்காட்டி முறை தமிழகத்தை பல்லவர் ஆண்ட காலத்தில் பிரபலமானதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நாள்காட்டி முறையில் ஆண்டுகள் சுழன்று வரும். அதாவது சர்வதாரி, பிரபவ போன்ற ஆண்டுகள் ஒருமுறை தொடங்கி முடிந்து மீண்டும் அறுபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வரும். இதில் ஒரு முறையான ஆண்டுக் கணக்கு இல்லை. இது 60 வருட சுழற்சி என்பதால் இந்த முறை, வரலாற்றுப் பதிவுக்கு உதவுவதில்லை என அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

3) தைப் புத்தாண்டுக்கு கணக்கு உள்ளதா?
உண்டு. இது திருவள்ளுவர் ஆண்டாக அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1921-ம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய அறிஞர் குழு மிக சீரிய ஆய்வுக்குப் பின் திருவள்ளுவர் ஆண்டையும் அதன் தொடக்கமாக தை முதல் நாளையும் தெளிவுபடுத்தியது. இதனால் ஓர் ஒழுங்கு முறையான ஆண்டுக் கணக்கு எளிதாக அனைவராலும் உணரப்பட்டது. எடுத்துக் காட்டாக,  2009-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று திருவள்ளுவர் ஆண்டு 2040 தொடங்குகிறது.

4) இது 2008-ஆம் ஆண்டுதான் கலைஞர் கருணாநிதியால் அறிமுகமானதாகச் சிலர் கூறுகின்றனரே?
நிச்சயமாக இல்லை. மறைமலையடிகள் காலத்திலேயே திருவள்ளுவர் ஆண்டுக்குரிய முதல் நாளாக பொங்கல் நாள் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு ஏற்கனவே பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. தமிழர்க்கு உரிய ஆண்டுக் கணக்கு அதில்தான் உள்ளது. ஆங்கில முறையில் ஏசுநாதர் பிறந்த ஆண்டு எப்படி ஒரு வரலாற்றுக் கணக்கைத் தருகிறதோ அது போல நம்மவர்க்கு திருவள்ளுவர் ஆண்டு விளங்குகிறது.(இப்படி ஒரு கணக்கு முறை இல்லாததாலேயே பலர் சித்திரையைத் தமிழரின் புத்தாண்டாக ஏற்பதில்லை.)பொங்கல் நாள் தமிழரின் புது வருட நாளாக பல்லாண்டு காலம் நடைமுறையில் கொண்டாடப் பட்டு வருகிறது. அன்றைய நாளில் வாசலில் மாவிலை கட்டி புத்தாண்டை வரவேற்று வந்திருக்கின்றனர் நம் முன்னோர். ஆகவே பொங்கலே ஆண்டுத் தொடக்கமாகக் கருதப்பட்டது.

5) தமிழர் திருநாள் என்பதும் அதே நாளில்தானா?
ஆமாம். சிங்கப்பூர், மலேசியாவாழ் தமிழர்களின் முயற்சியாலும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஊக்கத்தாலும் தமிழர்கள் சமய வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட வேண்டி 1952- இல் தொடங்கப்பட்டடது தமிழர் திருநாள். அதாவது, தமிழர்களுள் இந்துக்களாக இருப்போர் சித்திரைப் புத்தாண்டையும் முஸ்லிம் தமிழர்கள் முஹர்ரமையும் கிறிஸ்தவர்கள் ஜனவரி ஒன்றையும் சமய அடிப்படையில் புத்தாண்டாக ஏற்றாலும் மொழியால் ஒன்றுபட்ட அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, தங்களுக்குப் பொதுவான விழாவாக தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது ஓர் ஒற்றுமைத் திருநாள் எனலாம். மேலும், திருவள்ளுவர், அனைத்து சமயங்களையும் சேர்ந்த தமிழர்க்கும் பொதுவான தமிழறிஞர் என்பதாலும் உழவுத் தொழில் அனைத்து மக்களுக்கும் அவசியமானது என்பதாலும் சூரியன் அனைவருக்கும் பொது என்பதாலும், திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான, சூரியனைப் போற்றும் தைப் பொங்கல் நாள் தமிழர் திருநாளுக்குப் பொருத்தமானதாக ஏற்கப்பட்டது.

6) அப்படியானால், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லாமல் இந்துப் புத்தாண்டு எனலாமே?
அப்படித்தான் பல சமயங்களில் சொல்லப்படுகிறது. சித்திரைப் புத்தாண்டை இந்துப் புத்தாண்டு என்றும் தைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்றும் பாகுபடுத்திதான் பல ஏடுகளில் தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, மலேசிய ஏடுகளில் இதைத் தெளிவாகக் காணலாம். இந்துப் புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு என்று சொல்வதே முறை. தமிழுக்கும் சித்திரையில் தொடங்கும் நாட்காட்டி முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

7) இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குங்கள்.

a) தை முதல் நாளில் தொடங்கும் புத்தாண்டுக்குக் கணக்கு உண்டு. ஆனால், சித்திரை மாதம் தொடங்கும் ஆண்டுக்குக் கணக்கு இல்லை. அது, அறுபதாண்டு சுழற்சி முறையில் வரும் பெயர்களைக் கொண்டது.  அந்த 60 பெயர்களும் தமிழில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இது தமிழரின் பழம்பண்பாடாகக் கொள்ளப்படாமைக்கு இதுவும் ஓர் அடிப்படைச் சான்றாகும்.

b) தைப் புத்தாண்டு, கிராமங்களில் உழவுத் தொழிலுடன் தொடர்புடைய ஒரு விழாவாகும். இதன் மூல காரணம் தமிழகத்தின் விவசாயம், அறுவடைக் காலம் அதன் தொடர்பில் மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம், முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுந்தது. மாறாக, சித்திரைப் புத்தாண்டு முறைமை, தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த பல்லவர்களின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாரதர் பற்றிய ஒரு புராணக் கதையை முன்னிட்டு அமைந்தது.

c) தைப் புத்தாண்டைத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி வந்துள்ளனர். தமிழ் முஸ்லிம்கள், தமிழ்க் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்களுக்கும் பொதுவான, இன அடிப்படையிலான விழாவாகத் தைப் புத்தாண்டு விளங்குகிறது. மாறாக, சித்திரைப் புத்தாண்டை இந்துக்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

d) பாரதிதாசன், மு வ, அகிலன் போன்ற தமிழறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வந்திருப்பது தை முதல் நாள்  தமிழ்ப் புத்தாண்டு எனும் கருத்தையே.

8) அப்படியானால் சித்திரைப் புத்தாண்டை தமிழர்கள் கொண்டாட வேண்டாமா?
அது அவரவர் விருப்பம். தமிழர்கள், ஓராண்டில் வரும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தையும் கொண்டாடித்தான் வந்துள்ளனர். அதில் பிழையில்லை. ஆனால் இதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது தவறு. வரலாற்றுக் கணக்கு வேண்டுமென்பவர்களும் திருவள்ளுவர் ஆண்டை மதிப்பவர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர் வாழ்வில் சூரியனுக்கு முக்கிய இடம் உண்டு என்பதால் பொங்கல் நாள் புத்தாண்டாக நிலைக்கிறது. அதாவது, பொங்கல் சூரியனைப் போற்றும் நாள். நாம் உண்ணும் உணவுக்கு உதவும் ஞாயிறு(சூரியன்) பொங்கல் அன்றுதான் பூமத்திய ரேகையின் தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்கிறது. இதனை முன்னிட்டே இந்நாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் மற்ற மொழி இந்தியர்களாலும் கொண்டாடப் படுகிறது. தமிழின் முக்கிய நூலான சிலப்பதிகாரம் 'ஞாயிறு போற்றுதும்' என்று ஆரம்பிக்கிறது. அதிலிருந்தே நம் பண்பாட்டில் கால காலமாக கதிரவனுக்கு உள்ள முக்கியத்துவம் புலப்படும். பொங்கலன்று நம்மவர்கள் சூரியனுக்கு உணவைப் படைத்து நன்றி கூறும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. சூரியனை முதன்மைக் கோளாகக் கொண்டு மற்ற கோள்களின் சுழற்சி கணக்கிடப்படுகிறது. ஆகவே, சூரியனை வைத்துதான் ஆண்டு நாள்காட்டி தொடங்க வேண்டும் என்று எண்ணி பலர் தை முதல் நாளையே தமிழ் வருடப் பிறப்பாகக் கொள்கின்றனர்.

9) சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா?  அதற்குப் பலரும் முக்கியத்துவம் தரக் காரணம் என்ன?
 சித்திரை மாதம் தொடங்கும் கால கட்டத்தில் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதுதான் அதன் சிறப்பு. அக்காலத்தில்தான் ஜோதிடர்கள் புதிய பஞ்சாங்கம் எழுதத் துவங்குவர்.

10) தமிழ் இலக்கியங்கள் எந்த முறையை ஆதரிக்கின்றன?
இரண்டுக்கும் குறிப்பு உண்டு. ஆனால் இவ்விரு நாட்களையும் விட முக்கியமாக ஆவணி மாதத் தொடக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.  சில உண்மைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (அ) பழந்தமிழரின் விழாக்கள் எல்லாமே இலக்கியக் குறிப்பின்வழி அறியப்படமாட்டா. ஏனெனில் பல இலக்கியங்கள் நமக்குக் கிட்டாமலேயே மறைந்துவிட்டன. எனவே நாம் மக்களின் பழக்கவழக்கங்களை வைத்து உய்த்துணர வேண்டிய நிலை உள்ளது. (ஆ) இலக்கியங்கள் கூறும் முறைப்படி பார்த்தாலும் ஆவணி மாதத் தொடக்கம் ஒரு புத்தாண்டு என்ற பழந்தமிழர் வழக்கம் இப்போது பரவலாகத் தமிழரிடம் இல்லாமல் மறைந்துவிட்டது.

11) இந்த நிலையில் எதனைக் கொண்டாடுவது சிறப்பாகும்?
உங்கள் மனத்தில் உள்ள அடையாளம் எந்த வகையில் வலுவானதாக உள்ளது என்று சிந்தித்து முடிவெடுங்கள். இனம், மதம், மொழி, நாடு போன்ற முக்கியமான நான்கு அடையாளங்கள் நமக்கு உள்ளன. அவற்றுள் ஆக உயர்வாக நீங்கள் எதனை மதிக்கிறீர்கள்? மொழி முக்கியம் என்றால் தைப் புத்தாண்டு. மாறாக, சமயம் முக்கியம் என்றால்,  சாளுக்கியர் காலத்தில் பிரபலமான சித்திரைப் புத்தாண்டு.  இரண்டும் சமம் என்றால் இரண்டையும் கொண்டாடுங்கள். ஆனால், பெயரை மட்டும் முறையாகச் சொல்லுங்கள். தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. சித்திரை முதல்நாள் இந்துப் புத்தாண்டுதான். அது இந்தியாவின் பிற மாநிலக் கலாசாரங்களின் செல்வாக்கைக் கொண்டுள்ளது. சித்திரை மாதம் தொடங்கும் காலத்தில் பல இந்திய மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுவது இதற்கு ஒரு சான்று எனலாம்.  

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...