கற்க கற்க
விளம்பிநாகனார் என்ற புலவர் இயற்றிய நான்மணிக்கடிகை எனும் நூல், 3-ஆம் பாடல் முதல் 106-ஆம் பாடல் வரை வானொலியில் 'கற்க கற்க' நிகழ்ச்சியில் தினம் ஒரு பாடலாக ஒலியேறி வந்தது. 6.8.07 தொடங்கி 26.12.07 வரை நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாடலும் விளக்கத்துடன் ஒலிபரப்பப்பட்டது.
பதினெண் கீழ்க்கணக்கு வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த இலக்கியம் வானொலியில் தினமும் ஐந்து முறை ஒலியேறியபோது நேயர்கள் பலர் மிகுந்த பாராட்டைத் தெரிவித்தனர். இதனை நூலாக வெளியிடக் கோரினர். எனினும் இதனை வழக்கமான தாள் நூலாக வெளியிடாமல் இணையத்தில் அச்சிடுவதையே நான் தேர்ந்தெடுத்தேன். அதற்குக் காரணங்கள்:
1) இன்றுவரை 'கற்க கற்க' நிகழ்ச்சி தொடர்கிறது. அந்தத் தொடர் முடியும் வரை காத்திருப்பதை விட, அவ்வப்போது முடித்த இலக்கியங்களை வெளியிடுவதே நல்லது. வாசிக்க விரும்பும் நேயர்களுக்கு உடனடிப் பலன் கிட்டும்.
2) இதுவரை இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கும் இனி பயன்படுத்த இது ஓர் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். எதிர்காலத் தமிழ் வளர்ச்சியின் அடையாளம் இணையத் தமிழ்தானே!
3) சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் என் பணி சென்று சேர வேண்டும். கடினமான செய்யுள் என்று எண்ணி ஒதுக்காமல் எளிய விளக்கங்களைப் படித்து இவற்றின் பொருளை அனைவரும் அனுபவிக்க வேண்டும். எல்லாருக்கும் அறிமுகப்படுத்த இந்த வலைப்பக்கம்தான் சிறந்த மேடை.
4) உலக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மேலோங்கி வரும் வேளையில் ஒலி 96.8 தன் பங்காக இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் என்று கருதுகிறேன். மரங்களை அழித்து உருவாக்கப்படும் காகிதங்களால் நூல் வெளியிடப்படவில்லை. இந்தக் கணினிப் புத்தகத்தை மாணவர்களும் மற்றவர்களும், வேண்டியபோது எளிதில் எட்ட முடியும். தேவையானால் அச்சிட்டுக் கொள்ளலாம். Thumbdrive போன்ற பதிவுக் கருவிகளில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைக்கலாம்.
5) வாசகர்கள் இந்த மின் நூலை பொது நிகழ்ச்சிகள் எதற்கேனும் பயன்படுத்த விரும்பினால், அது பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
6) நூல் வெளியிட்டு விற்பனை செய்து பணம் ஈட்டும் நோக்கம் இங்கு இல்லை. நல்ல தமிழ் இலக்கியம் நாலு பேருக்கு சென்று சேர வேண்டும்; நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்பதே நோக்கம். எனவே இயன்ற அளவு பிறருக்கும் இதனைப் பற்றி எடுத்துச் சொல்லுமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். முடிந்தால் தமிழ் அறியாத நண்பர்களுக்கும் தமிழின் நீதி நெறிக் கருத்துகள் பற்றி எடுத்துக் கூறுங்கள்.
தமிழ் வாழ்க.
அன்புடன்,
மீனாட்சி சபாபதி
மீடியகார்ப் வானொலி ஒலி 96.8, சிங்கப்பூர்
நான்மணிக்கடிகை
கடவுள் வாழ்த்து 1
மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.
பொருள்:
நிலவு, நிலையான திருமாலின் ஒளிமயமான முகத்தைப் போன்றது. ஒளி வீசும் சூரியன் திருமாலின் சக்கரத்தைப் போன்றது. நீர் நிறைந்து இருக்கும் பழமையான குளங்களில் உள்ள தாமரைத் தண்டில் முளைக்கும் செந்தாமரை மலர் திருமாலின் விழிகளைப் போன்றது. காயாம்பூவின் நீல நிறம் திருமாலின் மேனி நிறத்துக்கு ஒப்பானது.
கடவுள் வாழ்த்து 2
படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்.
பொருள்:
உலகத்தை தன் மடியில் வைத்தவன். தன் திருவடியால் மூன்று உலகையும் அளந்தவன். இந்திரனுக்கு மக்கள் பயந்த காலத்தில் பசுக்களையும் மக்களையும் காக்க கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன். அசுரரின் நெருப்பு மதிலை அழித்தவன் -திருமால்.
நான்மணிக் கடிகை - பாடல் 3
எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார் கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து
இந்தப் பாடல் கூறும் அறிவுரை என்னவென்றால்:
எப்போதுமே நம்மை விட வலிமை குறைந்தவரையும் ஏழைகளையும் பார்த்து ஏளனமாகப் பேசக்கூடாது. அதே சமயம் ஒழுக்கம் இல்லாதவர்கள் அல்லது ஆணவக்காரர்கள் இடமிருந்து எந்த உதவியையும் பெறக் கூடாது. வசதியில்லாத குடும்பங்களில் பிறந்தவர்கள் வருத்தத்தினால் அல்லது பொறாமையால் கடும் சொல் பேசக் கூடும். அப்போது மனதுக்குள் வருத்தம் வந்தாலும் அவர்களிடம் கோபம் காட்டக் கூடாது. திட்டிப் பேசக் கூடாது.
நான்மணிக் கடிகை நூலின் நாலாம் பாடல்.
பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு
இனி பாடலின் பொருள்:
அசுணம் என்பது மென்மையான இசையை ரசிக்கக்கூடிய ஒருவகைப் பறவை. பறை எனும் கடினமான தாளவாத்தியக் கருவியின் அதிர வைக்கும் சத்தத்தைக் கேட்டால் அந்த இரைச்சல் தாங்காமல் அந்தப் பறவை இறந்து விடுமாம். அதுபோல்தான் சில மனிதர்களும். வாழ்க்கையில் தங்களுக்கு இனிமை மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக துன்பம் ஏதேனும் வந்துவிட்டால் உயிரை விட்டு விடுவார்கள்.
காட்டில் மரங்கள் மிக அடர்த்தியாக வளர்ந்திருந்தால் அங்கு நெல் முளைக்க வழி இல்லை. வளரத் தொடங்கும் போதே அழிந்து விடும். அது போல, ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய முயலும்போது சுற்றி உள்ளவர்கள் அதனை ஊக்குவிக்காமல் எதிர்மறையாகப் பேசி அவன் மனதைப் புண்படுத்தினால் அவனது முயற்சி ஆரம்பத்திலேயே முடங்கிவிடும்.
நான்மணிக் கடிகை நூலின் ஐந்தாம் பாடல்.
மண்ணியறிப மணி நலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன்
இந்தப் பாடலின் பொருள்:
நவரத்தின மணிகளின் சிறப்பை அறிய அவற்றை நன்றாக தூய்மை செய்து பார்க்க வேண்டும். ஒரு குதிரையின் சிறப்பை அறிய அதன் மீது சேணம் முதலியவற்றை அமைத்து அதன் மீது ஏறி அமர்ந்து ஓட்டிப் பார்க்க வேண்டும். பொன்னின் தரத்தை அறிய அதனை நெருப்பில் சுட்டுப் பார்க்கலாம். பணம் இல்லாத வறுமைச் சூழல் வந்தால் உறவினர்களின் உண்மையான குணத்தை அறிந்து கொள்ளலாம்.
நான்மணிக் கடிகை நூலின் ஆறாம் பாடல்.
கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரிதாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி
இந்தப் பாடலின் பொருள்;
கள்ளிச் செடி சாதாரணமானது. ஆனால் அதில் மதிப்புள்ள அகில் கட்டை தோன்றும். மானின் வயிற்றில் ஒளி மிகுந்த அரிதாரம் தோன்றும். பெரிய கடலுக்குள்ளே விலையுயர்ந்த முத்து கிடைக்கிறது.
நல்ல குணம் கொண்ட உயர்ந்த மனிதர் எந்தக் குடும்பத்தில் பிறப்பார் என்பதை யார் அறிவார்?
நான்மணிக் கடிகை நூலின் ஏழாம் பாடல்.
கல்லில் பிறக்கும் கதிர்மணி காதலி
சொல்லில் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று
அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளில் பிறந்து விடும்
இந்தப் பாடலின் பொருள்:
கல் பாறைகளில் ஒளி வீசும் ரத்தின மணிகள் கிடைக்கும். காதலியின் இனிய பேச்சால் மனதில் களிப்பு தோன்றும். அருளாளர்களின் மென்மையான கருணையால் அற நெறிகளும் நல்ல வாழ்க்கை முறைகளும் தோன்றும். மற்றபடி மனிதர்களின் நன்மை எல்லாம் செல்வத்தால் கிடைக்கும்.
நான்மணிக் கடிகை நூலின் எட்டாம் பாடல்.
திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு
இந்தப் பாடலின் பொருள்:
யாருக்கும் தீங்கு செய்யாத குணம் பெரும் செல்வத்துக்கு இணையானது. குடும்பக் கடமைகளைத் தவறாமல் செய்து வருவது சீரிய தவத்துக்கு இணையானது. ஒருவரிடம் நண்பராகப் பழகிக் கொண்டே அவரை ஏமாற்றுவது கொலைக் குற்றத்துக்கு இணையானது. தம்மை மதிக்காதவரிடம் சென்று உதவி கேட்பது மிகவும் கேவலமானது.
நான்மணிக் கடிகை நூலின் ஒன்பதாம் பாடல்.
கள்வமென்பார்க்கும் துயிலில்லை காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென்பார்க்கும் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
இந்தப் பாடலின் பொருள்:
துயில் என்றால் தூக்கம்.
பிறர் சொத்தை எப்படிக் கொள்ளையிடலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருப்போர்க்கு தூக்கம் வராது. காதலியை நினைத்து உருகும் ஆணுக்கும் உறக்கம் வராது. எப்படி உழைத்து முன்னுக்கு வந்து பணக்காரராவது என்று இடைவிடாது சிந்திப்பவரும் தூக்கத்தை மறந்து விடுவார். சிரமப் பட்டு சேர்த்த பொருளை யாராவது திருடி விடுவார்களோ என்று பயந்து பாதுகாப்பவர்க்கும் தூக்கமில்லை.
நான்மணிக் கடிகை நூலின் பத்தாம் பாடல்.
கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று
உற்றார் முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும்
இந்தப் பாடலின் பொருள்:
அறிவு நூல்களைக் கற்றவர்கள் எதையாவது இழக்கும்போது வருந்த மாட்டார்கள். உலகமே நிலையில்லை என்று ஆறுதல் அடைவார்கள். விரும்பி ஒரு காரியத்தை செய்பவர் அதில் தோல்வி வரும்போது அழமாட்டார்கள். எல்லாம் நன்மைக்கே என அமைதி காண்பார்கள். தான் செய்வது தவறு எனத் தெரிந்தே தீங்கு செய்வோர் கடவுள் அருள் பெறமாட்டார்கள். கோபம் கொள்வோர் எந்த நன்மையையும் அனுபவிக்க மாட்டார்கள்.
நான்மணிக் கடிகை நூலின் பதினோராம் பாடல்.
நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத்து அறம்
இந்தப் பாடலின் கருத்து:
நெல்லும் கரும்பும் விளையும்போது நிலத்துக்கு மதிப்பு கூடுகிறது.
தாமரை மலர்ந்துள்ள போது குளம் அழகு பெறுகிறது.
நாணம் என்னும் குணம் பெண்ணுக்கு அழகு என கவிஞர்கள் கூறுவர்.
மனிதர்க்கு அழகு மரணத்துக்குப் பின் செல்லும் உலகத்தைப் பற்றி எண்ணி இப்போதே தர்ம காரியங்கள் செய்வது.
நான்மணிக் கடிகை நூலின் பன்னிரண்டாம் பாடல்.
கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர
மந்திரத்தாற் பிணிப்பர் மாநாகம் - கொந்தி
இரும்பிற் பிணிப்பர் கயத்தைச் சான்றோரை
நயத்தில் பிணித்து விடல்
இந்தப் பாடலின் பொருள்:
யானையை அடக்கி வைக்க கட்டுத் தறியில் கட்டி வைப்பார்கள்.
பாம்புகளின் சீற்றத்தை அடக்க மந்திரங்களைப் பயன்படுத்துவர் பாம்பாட்டிகள்.
கொடிய குற்றவாளிகளை விலங்கு மாட்டி கட்டுப்படுத்துவர்.
நன்கு படித்த பெரியவர்களிடம் நயமாக இனிமையான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்களை நம் வசப்படுத்தலாம்.
நான்மணிக் கடிகை நூலின் பதின்மூன்றாம் பாடல்.
கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கம் சிதைக்கும் வினை
இந்தப் பாடலின் பொருள்:
நமக்கு பிறர் செய்த கொடுமைகளை மீண்டும் மீண்டும் நினைத்து வெறுப்படைய வேண்டாம்.
நமக்கு பிறர் செய்த நன்மையை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மதிக்க வேண்டும்.
கோபத்தை உடனடியாக விட்டு விட வேண்டும்.
நம்மை வளர விடாமல் தடுக்கும் கெட்ட பழக்கங்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினாலாம் பாடல்.
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு
கோட்டால் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர் நோய்.
இந்தப் பாடலின் பொருள்:
பாம்புக்கு கோபம் வந்தால் அது பல்லால் கொத்தி துன்புறுத்தும். கொடிய விலங்கு சினமடைந்தால் கொம்பால் தாக்கும். பெண்கள் கோபம் வந்தால் முகக் குறிப்பினால் காட்டுவார்கள். தவ வலிமை உள்ள முனிவர்களுக்கு கோபம் வந்தால் சாபம் கொடுத்துவிடுவார்கள்.
நான்மணிக் கடிகை நூலின் பதினைந்தாம் பாடல்.
பறைநன்று பண்ணமையா யாழின் - நிறை நின்ற
பெண் நன்று பீடிலா மாந்தரின் - பண் அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று
இந்தப் பாடலின் பொருள்:
இனிமையான யாழில் சுருதி சரியாக அமையாவிட்டால், அதை விட, இரைச்சலான பறை ஒலியே மேலானதாகும். உதவாத ஆண் பிள்ளைகளை விட நல்ல பெண் பிள்ளைகளே மேலானவர்கள். கெட்டுப் போன உணவை உண்பதை விட எதுவும் உண்ணாமல் பட்டினியாக இருப்பதே மேல். அன்பு கொண்டவரை விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதை விட தீயில் புகுந்து மாள்வதே மேல்.
நான்மணிக் கடிகை நூலின் பதினாறாம் பாடல்.
வளப்பாத்தியுள் வளரும் வண்மை கிளைக்குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து
இந்தப் பாடலின் பொருள்:
செல்வம் எனும் பாத்திக்குள் வள்ளல்தன்மை எனும் செடி வளரும். அதாவது பணம் கொழித்தால் ஈகை குணம் தானே வரும். அதுபோல இனிமையாகப் பேசும் பழக்கம் இருந்தால் உறவினர் வட்டம் தானே பெருகும். கண்ணோட்டம் எனும் இரக்க குணம் இல்லாதபோது வஞ்சனையும் சூழ்ச்சியும் வளரும். வறுமை நீடித்தால் பிறரிடம் யாசிக்கும் பழக்கும் வளரும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினேழாம் பாடல்.
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவன் தன்னைப் பிறர் கேவலமாக நினைக்கட்டும் என்று நினைத்தால் அவன் பிச்சை கேட்கப் புறப்படலாம். இந்த உலகில் புகழோடு வாழ வேண்டும் என்று விரும்பினால் ஒழுக்கத்தோடு விளங்க வேண்டும். மரணத்துக்குப் பின் தன்னோடு துணையாக வரும் புண்ணியத்தைச் சேர்க்க விரும்பினால் தர்மம் செய்ய வேண்டும். எப்பொழுதும் வெற்றி வேண்டுமென்றால் கோபத்தைக் கைவிட வேண்டும்.
நான்மணிக் கடிகை நூலின் பதினெட்டாம் பாடல்.
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்
இனி பாடலின் பொருள்:
குட்டம் என்றால் ஆழம். நல்ல கப்பலை உடையவர் ஆழ்கடலை எதிர்த்துப் பயணம் செய்வார்கள். விரைந்து ஓடும் படைக் குதிரையை உடையவர் பெரிய படைக் கூட்டத்தை எதிர்த்து முன்னே செல்வர். தன் மனத்தை அடக்கத் தெரிந்தவன் தவம் எனும் ஆழமான கடலை நீந்திச் சென்று சாதனை புரிவான். நன்றாக தெளிவாகப் படித்து உணர்ந்தவன் புலவர்கள் நிரம்பிய சபைகளை எளிதாக எதிர்கொள்வான்.
நான்மணிக் கடிகை நூலின் பத்தொன்பதாம் பாடல்.
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர்
இந்தப் பாடலின் பொருள்:
நட்பு எல்லாமே ஒரு பொய் வரைக்கும்தான். நண்பர்களில் ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றியது தெரிய வந்தால் அதோடு நட்பு முடிந்துவிடும். இளமை அழகு என்பது நோய் வரும் வரைதான். ஆரோக்கியம் கெட்டால் அழகும் கெடும். ஓர் அளவை எட்டும் வரைதான் செல்வம் மகிழ்விக்கும். அளவைத் தாண்டி பணம் சேரும்போது அதன் மதிப்பு போய்விடும். உயிர் வாழ்க்கை என்பது ஆயுள் இருக்கும் வரைதான். அதன்பின் உயிருக்கு இவ்வுலகில் செய்ய ஒன்றுமில்லை.
நான்மணிக் கடிகை நூலின் இருபதாம் பாடல்.
மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம் செவ்வியனாதல் சினச் செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல்
இந்தப் பாடலின் பொருள்
திறமை உடைய பெண்களால் குடும்பத்துக்கு சிறப்பு வளரும். வேற்படையில் நிறைய கற்றுத் தேர்வது ஒரு வீரனின் வேலைக்கு சிறப்பு சேர்க்கும். தன் நாட்டு அரசன் நல்லவன் என்று மக்கள் நம்பும்படி அரசன் நடப்பது நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும். உறவினர்களைப் பகைத்து விலக்கி விடுவது கேடுகளை வளர்க்கும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்தோராம் பாடல்.
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும்
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு குடும்பத்தில் கணவன் கடமையிலிருந்து தடுமாறினால் மனைவியின் நிம்மதி கெட்டு அவள் கடமைகளும் தடுமாறும். படித்த புலவர் அறிவு கலங்கினால் அவர் எழுதும் நூல்களில் உள்ள பொருள் தவறாகி விடும். மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து அவர்கள் எதிர்த்தால் அரசனின் ஆட்சி கவிழும். இசைக்கருவியின் நரம்புகள் சீர்கெட்டால் அதிலிருந்து எழும் இசை தாறுமாறாகும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்திரண்டாம் பாடல்.
மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்
திசைக்குப் பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லாத உடம்பு
இந்தப் பாடலின் பொருள்:
வீட்டில் பொறுப்பேற்று கடமையாற்ற பெண் ஒருத்தி இல்லையென்றால் அந்த வீடு சிறப்பாக இயங்காது. புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்கு தெரிந்தவர் யாரும் இல்லையென்றால் எளிதாக காரியமாற்ற முடியாது. பலர் கூடும் சபை நிகழ்ச்சிகளில் வழிகாட்ட அனுபவம் வாய்ந்த பெரியவர் இல்லாவிட்டால் அங்கு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெறாது. படிப்பு எதுவுமே இல்லாத மனிதனின் உடம்பு அவனுக்கு எந்த சிறப்பையும் சேர்க்காது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து மூன்றாம் பாடல்.
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியைப் -பெய்த
கலஞ் சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின்
இந்தப் பாடலின் பொருள்:
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதபோது அது சீரழியும். ஒழுக்கம் இல்லாதவனின் உடம்பு நோய் வந்து கெட்டழியும். ஊற்றும் பாத்திரம் சுத்தமாக இல்லாவிட்டால் பால் கெட்டுப் போகும். சேரக் கூடாதவர்களிடம் சேர்ந்து பழகினால் குலமே அழியும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து நாலாம் பாடல்.
புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை - காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு
இந்தப் பாடலின் பொருள்:
பொய் பேசாமல் ஏமாற்றாமல் நேர்வழி நடப்பது புகழைக் கொண்டு வரும். அறிவில்லாத போது மதிக்க வேண்டியவரையும் மதிக்காமல் நடக்கத் தோன்றும். படிப்பு இல்லையென்றால் கண் பார்வை இல்லாதவர் வழி தெரியாமல் தடுமாறுவதுபோல் வாழ்வில் நிலை தடுமாற நேரும். கல்வியறிவு வளரும்போது இருள் விலகி ஒளி தெரிவதுபோல் வாழ்வில் தெளிவு உண்டாகும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஐந்தாம் பாடல்.
மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும்
அன்னேயென்றோடும் குழவி சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்
இந்தப் பாடலின் பொருள்:
யானை மீதுள்ள பாகன் அதனை அடித்துக் கட்டுப்படுத்தினாலும் யானை அவனைக் கீழே தள்ளி விடுவதில்லை. குழந்தையை தாயார் கண்டித்தாலும் அது தாய் மீது பாசத்துடன் அம்மா என்றழைத்து ஒட்டிக் கொள்ளும். நல்ல நண்பர்கள் இடையே எவ்வளவு தகராறு, கோபம் வந்தாலும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யமாட்டார்கள். ஆனால் மனத்தளவில் ஒட்டாத பகைவர்கள் ஒன்று கூடி வாழும் காலம் வரவே வராது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஆறாம் பாடல்.
நகைநலம் நட்டார்கண் நந்தும் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனால் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும்
இந்தப் பாடலின் பொருள்:
நட்பு என்பது உள்ளத்தில் உள்ளது என்றாலும் அது புன்னகையால்தான் வெளியே அறியப்படும். அறிஞர் பெருமக்களின் சபைகளில் ஆராயப்படுவது அறிவுத்திறன்தான் என்றாலும் அங்கு அன்பும் சேர்ந்திருப்பதே சிறப்பு. தேர் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அதனை ஓட்டுபவனின் திறமையால்தான் அதன் சிறப்பு அறியப்படும். ஒரு நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதனை ஆள்பவரின் சிறப்பை வைத்துதான் அந்த நாட்டின் பெருமை அமையும்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஏழாம் பாடல்.
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி
நட்டார்கண் விட்ட வினை
இந்தப் பாடலின் பொருள்:
பழி பாவங்களுக்கு அஞ்சாத கொடிய குணம் நமக்கு வரக்கூடாது; அதற்கு பயப்பட வேண்டும். முடிந்த அளவு உதவிகள் செய்துவிட வேண்டும். கடமைகளில் மிச்சம் வைக்கக் கூடாது. மனதறிந்து யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டதென்றாலும் நண்பரிடம் ஒரு வேலையை ஒப்படைத்த பின் அதில் நம்பிக்கையின்றி குறுக்கிடக் கூடாது.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து எட்டாம் பாடல்.
அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம்
இந்தப் பாடலின் பொருள்:
கொன்று தின்பதற்காக பிராணிகளை வளர்ப்பது குற்றம்
விலைக்கு விலங்குகளை விற்பதும் அவற்றை வாங்கி இறைச்சியாகத் தின்பதும் குற்றம். சொல்லத் தகுதியில்லாத சொற்களைப் பேசுவதே குற்றம் என்னும்போது கொலை வகைகள் எல்லாமே குற்றங்கள்தாம்.
நான்மணிக் கடிகை நூலின் இருபத்து ஒன்பதாம் பாடல்.
கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று
இந்தப் பாடலின் பொருள்:
நாட்டில் வாழும் குடிமக்கள் அரசாங்கத்தின் திறமையை நம்பி வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை நம்பி உயிர் வாழும். வானத்தின் மழைநீரை நம்பி பூமியில் உயிர்கள் வாழ்கின்றன. உயிர்களின் முடிவை எண்ணி மகிழ்வான் எமன். அதாவது எல்லா வாழ்க்கை சுழற்சியும் ஒரு முடிவுக்கு உட்பட்டது என்பது பொருள்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பதாம் பாடல்.
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந் தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் - கோளுணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும்
இனி பாடலின் பொருள்:
நீதி நூல்களைப் படிக்கப் படிக்க குழப்பம் நீங்கும். இந்த உலகைப் பற்றிய தெளிவு உண்டாகும். இந்த பூமி எனும் கோளின் தன்மைகளை முழுமையாக உணர்ந்தால் தத்துவ சிந்தனைகளில் மனம் சேரும். அருள் நெறி மனதில் வளர்ந்தால் இவ்வுலகில் வாழும்போது புகழுக்குரிய நல்ல காரியங்கள் செய்யத் தோன்றும். தொடர்ந்து மரணத்துக்குப் பின்னும் மேலுலகில் உயர்ந்த நிலை கிட்டும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்தோராம் பாடல்.
குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவழி நிற்பது காமம் தனக்கொன்று
உறுவழி நிற்பது அறிவு
இந்தப் பாடலின் பொருள்:
குழியில் விழுந்த தண்ணீர் அங்கிருந்து அகலாமல் தேங்கி நிற்கும். பல நல்லவர்கள் பழிக்கும்படி தீங்குகள் செய்தவரிடம் அந்தப் பாவம் தேங்கி நிற்கும். காமம் என்னும் உணர்வு தவ நெறியில் நிற்க விடாமல் தடுக்கும். எந்தத் துன்பத்திலும் உதவியாகக் கைகொடுப்பது சொந்த அறிவுதான்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்திரண்டாம் பாடல்.
திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிற இல்லை -எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை இல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல்
இந்தப் பாடலின் பொருள்:
வாழ்க்கையில் பெரிய பலமாக விளங்குவது பணம் போல் வேறெதுவும் இல்லை. எப்போதும் உதவும் துணையாக விளங்குவது கல்வியைத் தவிர எதுவுமில்லை. வறுமை போல துன்பம் வேறெதுவும் இல்லை. உதவி கேட்பவர்க்கு மறுக்காமல் எடுத்துத் தரும் மன உறுதி போல் சிறந்த குணம் வேறெதுவும் இல்லை.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து மூன்றாம் பாடல்.
புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்
முன்னம் வித்தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னா வித்தாகி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
நெருப்பு இருப்பதை புகை காட்டிக் கொடுக்கும். மனதில் மகிழ்ச்சி இருப்பதை முகத்தின் புன்னகை காட்டி விடும். பகை உணர்ச்சி கொண்டவனின் நோக்கத்தை அவனது செயல்கல் காட்டிக் கொடுத்துவிடும். பகை மூண்டபின் அது பல துன்பங்களுக்கு வழிவிடும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து நாலாம் பாடல்.
பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத்தவர்
இந்தப் பாடலின் பொருள்:
பின்விளைவுகளை எண்ணிப்பார்த்து முடிவெடுக்கும் திறமை இல்லாத பெண்கள், குடும்பத்துக்கு ஒரு நோய் போன்று துன்பம் தருபவர்கள். பிறர் மீது அன்பு செலுத்தும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உலகத்துக்கு அழகு சேர்க்கும் அணி ஆவார்கள். தானே உயர்வு என ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் பயிர் வளர விடாமல் தடுக்கும் களை போன்றவர்கள். அதாவது அவர்கள், தங்கள் குடும்பத்துப் பெண்களையும் பிறரையும் வளர விடாமல் தடுப்பவர்கள். மற்றவர்களின் துன்பத்தைப் பார்த்து மனம் இரங்காதவர்கள் கல்லைப் போன்றவர்கள்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஐந்தாம் பாடல்.
அந்தணரின் நல்ல பிறப்பில்லை என் செயினும்
தாயின் சிறந்த தமரில்லை யாதும்
வளமையோடொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோடு ஒப்பதூஉம் இல்
இனி பாடலின் பொருள்:
அந்தணரின் வாழ்க்கை பிறருக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொள்வது. அதை விடச் சிறந்த வாழ்க்கை முறை கிடையாது. மற்றவர்கள் நமக்கு என்னதான் உதவி செய்தாலும் நம்மைப் பெற்ற அன்னையை விட நெருக்கமாகிவிட முடியாது. செல்வம் சேரும்போது வரும் அழகுக்கு இணையாக வேறு அழகில்லை. என்னதான் செல்வம் இருந்தாலும் அதனை அனுபவிக்க முடிவது இளமையில்தான். அதைப் போல நல்ல காலம் கிடையாது.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஆறாம் பாடல்.
இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய
பெரியரான் எய்தப் படும்
இனி பாடலின் பொருள்:
இரும்புப் பொருளை வெட்ட இரும்புக் கருவியை பயன்படுத்துவர். நீர் கொண்டு சமைத்த உணவை உண்டபின் நீரால்தான் வாயைக் கழுவ நேரும். பார்க்கப்போனால் எவ்வளவு சிரமப் படுகிறோமோ அவ்வளவு நன்மை கிட்டும். சிறப்புகள் நிறைய உள்ள திறமைசாலிகள் மேலும் மேலும் சிறப்புகளை எட்டுவர்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஏழாம் பாடல்.
மறக்களி மன்னர் முன் தோன்றும் சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயுமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
மன்னர் முன்னிலையில் வீரம் காட்டும்போது படை வீரர்களுக்கு மகிழ்ச்சி தோன்றும். ஏழைகளுக்கு தானம் செய்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்கும்போது நல்ல மனிதர்க்கு மகிழ்ச்சி தோன்றும். வறுமையில் வாடியவர், யாராவது உதவி செய்தால் உடனே மனம் மகிழ்வர். அற்பமானவர்கள், ஊரில் ஏதேனும் ஆரவாரம் ஏற்பட்டால் மகிழ்ச்சி கொள்வர்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து எட்டாம் பாடல்
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்
இந்தப் பாடலின் பொருள்
அழகான கண்கள் மையிட்டால் இன்னும் அழகாகும்.
எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றினால் இன்னும் அதிகம் எரியும்.
குருக்கத்தி மரத்தின் இலை அதிக மழை பெய்தால் இன்னும் பசுமையாகும்.
பணம் படைத்தவர் தங்கள் உறவினர்க்கு உதவிகள் செய்தால் அவர்களிடம் இன்னும் செல்வம் பெருகும்.
நான்மணிக் கடிகை நூலின் முப்பத்து ஒன்பதாம் பாடல்
நகை இனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகை இனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்
பெண் இனிது பேணி வழிபடின் - பண் இனிது
பாடல் உணர்வார் அகத்து
இந்தப் பாடலின் பொருள்
நண்பர்கள் பார்த்ததும் நட்போடு புன்னகை செய்தால் அது இனிமை. நிறைய பொருளை அன்பளிப்பாக வள்ளல்கள் கொடுக்கும்போது அந்தப் பணத்துக்கு தனி மதிப்புதான். நல்ல பெண் குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தினால் அவள் மிக இனிமையானவள். இசையின் இனிமையை உணரக்கூடிய மக்களுக்கு பண் எனும் ராகங்கள் மிகவும் இனிமை தரும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பதாம் பாடல்
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றீவார் பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு
இனி பாடலின் பொருள்:
யாருக்கும் ஒன்றையும் தர விரும்பாத கஞ்சர்க்கு, தம் பொருள்களை மறைத்து வைப்பதே குறிக்கோளாக இருக்கும். பிறர் உதவியை நம்பி வாழ்பவரின் குறிக்கோள், தனக்குதவும் வள்ளலைக் கண்டுபிடிப்பதுதான். படைக்குச் செல்லும் வீரரின் எண்ணம் வெற்றியை நோக்கி இருக்கும். மேல் உலகத்தில் நல்ல இடம் பெற எண்ணுவோரின் எண்ணம் எந்த உயிரையும் கொன்று தின்னாத கொள்கையில் இருக்கும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்தோராம் பாடல்
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யுந் திரு
இந்தப் பாடலின் பொருள்:
பார்த்துக் கற்றுக் கொண்டதை வைத்துதான் மனிதர்கள் தொழில் செய்வார்கள். முன்னர் ஞானியர் சொல்லி வைத்ததைக் கேட்டுதான் அறநெறியாளர்கள் தியானம் செய்வர். நல்லவர்கள் தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்காக உழைப்பார்கள். யாரிடமும் சினம் கொள்ளாமல் உதவுகிற மனிதருக்கு திருமகளின் அருளால் செல்வம் பெருகும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்திரண்டாம் பாடல்
திருவும் திணைவகையான் நில்லாப் பெருவலிக்
கூற்றமும் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற
மறைக்க மறையாதாங் காமம் - முறையும்
இறைவகையான் நின்று விடும்
இந்தப் பாடலின் பொருள்:
எந்தக் குடும்பம், குலம் என்று பாராமல் எவரிடமும் சேரக் கூடியது பணம். யார் எப்படிப்பட்டவர் என்று பாராமல் வந்து தாக்குவது மரணம். இனப் பெருக்கத்துக்குரிய காமம் என்னும் உணர்ச்சி மனிதர்க்கு இயற்கையாக வருவதைத் தடுக்க இயலாது. மனித சமுதாயங்களின் வாழ்க்கை முறை, ஆட்சியில் உள்ளவர்களைப் பொறுத்து அமையும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து மூன்றாம் பாடல்
பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடம்படின் தானே பெருகும் - கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும்
இந்தப் பாடல் விதியின் வலிமையை உணர்த்துகிறது. அதாவது:
பிறக்கும் என விதியுள்ள உயிரை, பிறக்க வேண்டாம் எனத் தடுத்தாலும் அது போகாது. இறக்கும் விதியுள்ள உயிரைப் போகாதே எனத் தடுத்தாலும் அது நில்லாது பிரிந்து போகும். ஒருவருக்கு திருமகள் அருள் சேரும் காலத்தில் அவர் முயற்சி எடுக்காதபோதும் செல்வம் வந்து குவியும். கெட்ட காலம் வரும்போது கண் முன்னாலேயே செல்வம் காணாமல் போகும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து நாலாம் பாடல்
போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த
வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்
மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி
மன்னர்சீர் வாடி விடும்
இந்தப் பாடலின் பொருள்:
போர் வீரர்களுக்கு பயிற்சி இல்லாவிட்டால் திறமை குறைந்துவிடும். மண்ணின் கீழ் பரவும் வேர் உறுதியாக இல்லாவிட்டால் மரம் பலவீனமாகும். நல்ல விதமாக தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் வயல்களில் பயிர் பச்சைகள் வாடிப்போகும். தேர்ச்சி பெற்ற படை இல்லையென்றால் ஒரு நாட்டின் சிறப்பு குன்றிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஐந்தாம் பாடல்
ஏதிலாரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்
காதலாரென்பார் தகவுடையார் - மேதக்க
தந்தையெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்
முந்துதான் செய்த வினை
இந்தப் பாடலின் பொருள்:
நமக்கு வேண்டாதவர் யாரென்றால் நல்ல பண்புகள் இல்லாதவர். நம்மிடம் அன்பும் அக்கறையும் உள்ளவர்தாம் நமக்கு வேண்டியவர். நல்ல கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தந்தைக்கு நிகராக மதிக்க வேண்டும். நாம் முன்பிறவியில் செய்த வினைக்கு ஏற்பத்தான் இப்பிறவியில் நம்மைப் பெற்றெடுக்கும் தாயார் அமைகிறார்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஆறாம் பாடல்
பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலம் மாறின்
நண்பினார் நண்பு கெடும்
இந்தப் பாடலின் பொருள் :
ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடத் தயங்கும் கூச்சம் வேண்டும். அந்தக் கூச்சம் இல்லையென்றால் உடல் கெடும். கண், காது, மூக்கு, வாய், உடல், ஆகிய ஐந்தையும் நல்வழியில் பயன்படுத்தினால் தீமை எல்லாம் மறையும். நீர் ஊற்றாதபோது செடிகொடிகள் வாடும். நன்மை எதுவும் இல்லையென்றால் நட்பின் தன்மை மாறிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஏழாம் பாடல்
நன்றிசாம் நன்றறியாதார் முன்னர்ச் சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியாதார் முன்னர் ஊடல்சாம்
ஊடல் உணரா ரகத்து
இந்தப் பாடலின் பொருள்:
நன்றி காட்டத் தெரியாதவர்க்கு உதவி செய்தால் அதன் மதிப்பு கெடும். அன்பு இல்லாதவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மன வருத்தம்தான் மிஞ்சும். ரசனை இல்லாதவர் முன் அருமையான பண் அமைந்த பாடலைப் பாடினால் பாட்டின் பெருமை கெடும். காதலின் தன்மை உணராதவரிடத்து மறைமுக ஊடல் பேச்சுப் பேசினால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து எட்டாம் பாடல்
நாற்றமுரைக்கும் மலருண்மை கூறிய
மாற்றமுரைக்கும் வினை நலந்தூக்கின்
அகம் பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்பதில்
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு பூவைப் பார்க்காதபோதும் அது அருகில் உள்ளதென்று உணரலாம் - அதன் வாசத்தைக் கொண்டு. ஒருவர் ஒரு செயலை நல்ல நோக்கத்தொடு செய்கிறாரா, கெட்ட நோக்கத்தோடு செய்கிறாரா என்பதை அவர் பேச்சை வைத்து உணரலாம். தீய குணமுடையவரின் உள்ளத்தில் தீய எண்ணங்கள், தானே தோன்றும். மனத்தில் உள்ள உணர்வை முகம் தெளிவாகக் காட்டிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் நாற்பத்து ஒன்பதாம் பாடல்
மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்
தவமிலார் இல்வழி இல்லை தவமும்
அரசனிலா வழி இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழியில்
இந்தப் பாடலின் பொருள்:
மழையின்றி மக்கள் வாழமுடியாது. நல்ல குணம் கொண்ட தவமுனிவர்கள் இல்லாதபோது மழை பொழியாது. அந்த முனிவர்கள் தவ வாழ்க்கை வாழ அரசரின் ஆதரவு வேண்டும். அரசர் நிம்மதியாக ஆட்சி புரிய நல்ல குடிமக்கள் இருக்க வேண்டும்.
உலக வாழ்வெல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பதாம் பாடல்
போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்
தாதினான் நந்தும் சுரும்பெல்லாம் தீதில்
வினையினான் நந்துவர் மக்களும் தத்தம்
நனையினான் நந்தும் நறா
இந்தப் பாடலின் பொருள்:
மாலைகள், அதில் தொடுக்கப்பட்ட மலர்களால் சிறப்படையும். அந்த மலர்களில் உள்ள தேனை சேகரிப்பதால் தேனீக்கள் சிறப்படையும். தேன், அது உள்ள பூவின் அரும்பினால் பெருகி சிறப்படைகிறது. மனிதர்கள் தாங்கள் செய்யும் நல்ல செயல்களால் பெருமை அடைகின்றனர்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்தோராம் பாடல்
சிறந்தார்க்கரிய செறுதல் எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க்கரிய வகுத்தூண் இரந்தார்க்கு ஒன்று
இல்லென்றல் யார்க்கும் அரிது
இந்தப் பாடலின் பொருள்:
கருணை உள்ளம் கொண்டவர், யாராவது தவறு செய்தாலும் அவரை உடனே வெறுத்து ஒதுக்கிவிடாமல் மன்னித்து விடுவார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினரை விட்டுப் பிரிந்து தனியே வாழ விரும்பமாட்டார்கள். வறுமையில் வாழ்பவர், பிறர்க்கு உணவு வழங்கி தான தர்மம் செய்வது கடினம். நல்ல மனம் கொண்டவர் உதவி நாடுவோர்க்கு தம்மிடம் உள்ளதை நிச்சயமாகத் தருவார்கள்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து இரண்டாம் பாடல்
இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரைசுடும் ஒண்மையிலாரை - வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையும்
தன்னடைந்த சேனை சுடும்
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல உணவாக இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட வயிற்றுக்குள் சென்றால் அது வலியைத் தரும். தெரியாத வேலையை தெரிந்ததாகப் பொய் கூறுவது தீங்கு விளைவிக்கும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத மனிதனின் வாழ்வில் அவனது முன்பிறவி வினைகள் வந்து பாதித்து துன்பம் ஏற்படுத்தும். அரசனாக இருந்தாலும் நீதி இல்லாதபோது தன் படைகளாலேயே எதிர்க்கப்படுவான்.
நான்மணிக்கடிகை நீதி நூலின் ஐம்பத்து மூன்றாம் பாடல்
எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருளது உறுதிச் சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருளது அறநெறி பன்னூலும்
தேர்தற் பொருள பொருள்
இந்தப் பாடலின் பொருள் :
ஒருவரைக் கேலி செய்து பேசுவது அவரது மனத்தை பலம் இழக்கச் செய்யும். ஒருவரைப் பாராட்டிப் பேசுவது அவர் மனதுக்கு வலிமையைத் தரும். உள்ளத்துக்கு மிகவும் உறுதியைத் தருவது நல்ல அறநெறிக் கொள்கைகள். அறநெறிகளை நன்கு உணர்வதற்கு சிறந்த வழி பல நூல்களைப் படிப்பது.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து நாலாம் பாடல்
ஆறுள் அடங்கும் குளமுள வீறுசால்
மன்னர் விழையும் குடியுள - தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடொப்ப உள
இனி பாடலின் பொருள்:
குளம் என்றால் சிறியதாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆற்றை உள்ளடக்கும் பெரிய குளங்களும் உண்டு. மன்னர்தான் எப்போதும் உயர்வெனச் சொல்ல முடியாது. மன்னரே விரும்பும் சிறந்த குடிமக்களும் உண்டு. வேதம் என்ற நூல் மட்டுமே சிறப்பெனச் சொல்ல முடியாது. அதைவிட நல்ல கருத்துள்ள நூல்களும் உண்டு. வேள்வி முதலிய சடங்குகளை விட அதிகம் புண்ணியம் தரும் ஈகைச் செயல்களூம் உண்டு.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஐந்தாம் பாடல்
எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்
ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி
இந்தப் பாடலின் பொருள்:
எருதுகளை வாங்கி அவற்றைப் பழக்கி வேலை செய்யத் தெரிந்தவர் உழவர். உழவுத் தொழில் தெரியாதவர் பார்ப்பன இனத்தவர். அவர் ,சேவல் ஒன்று பெட்டைக் கோழிக் கூட்டத்தோடு பழகுவது போல் வேற்று இனக் கூட்டத்தோடு பழகத் தெரிந்தவர். புகுந்த வீட்டு மக்களுடன் பழகத் தெரிந்த பெண் சிறந்த இல்லத்தரசி ஆவாள். படை வீரர் கூட்டத்துடன் நன்கு பழகும் முறை அறிந்தவர் சிறந்த படைத்தளபதி ஆவார்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஆறாம் பாடல்
யானையுடையார் கதன் உவப்பர் மன்னர்
கடும்பரிமாக் காதலித்தூர்வர் - கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு
இந்தப் பாடலின் பொருள்:
யானையை போருக்குப் பயன்படுத்துவோர், அது மதம் பிடித்து கோபத்தோடு அலைவதை விரும்புவார். மாறாக, குதிரையை விளையாட்டுப் பயணத்துக்குப் பயன்படுத்தும் மன்னர்கள் அதன் சாந்தமான குணத்தை விரும்புவர். நல்ல பண்போடுள்ள ஒழுக்கமான பெண்களை ஒழுங்கான ஆண்கள் மதிப்பர். ஒழுக்கமில்லாத பெண்களை அதேபோன்ற ஒழுக்கம் கெட்ட ஆண்கள் விரும்புவர்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஏழாம் பாடல்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோடு
எண்ணக் கடவுளுமில்
இந்தப் பாடலின் பொருள்:
மனிதர்க்கு கண்ணை விடச் சிறந்த வேறு உடல் உறுப்பு இல்லை. பெண்களுக்கு நல்ல கணவரை விட நெருங்கிய உறவினர் வேறு இல்லை. ஒரு தாயின் வாழ்க்கையில் ஒளியூட்டுவதற்கு அவர் பெற்ற பிள்ளைகளை விடச் சிறந்த பொருளில்லை. பெற்ற தாயை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து எட்டாம் பாடல்
கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்
செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென
உற்றதுரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புற்றன்னர் புல்லறிவினார்
இந்தப் பாடலின் பொருள்:
படித்தவர்களுடன் நன்றாகப் பழகும் மக்களை படித்தவர்க்கு இணையாக மதிக்கலாம். யாரிடமும் இரக்கம் காட்டாதவர்கள், பெரும் கொடுமைக்காரர்களுக்கு இணையானவர்கள். நம்மிடம் உண்மையை மறைத்துப் பேசுகிறவர்கள், நம் எதிரிகளுக்கு சமமானவர்கள். பிறர் துன்பத்தை விரும்பும் கீழ்மக்கள் புற்றில் மறைந்து வாழும் பாம்பைப் போல் ஆபத்தானவர்கள்.
நான்மணிக்கடிகை நூலின் ஐம்பத்து ஒன்பதாம் பாடல்
மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின்புறுவர்
துறப்பார் துறக்கத் தவர்
இந்தப் பாடலின் பொருள்:
உயர்ந்த மனிதர்கள், இயற்கையாகவே சமூகத்துக்கு நல்லது செய்யும் எண்ணம் கொண்டிருப்பார்கள். கீழானவர்கள், இயல்பாகவே தீமை செய்ய முனைவார்கள். நல்ல அறச் செயல்களைச் செய்யும் மனிதர்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் நன்மைகளைச் செய்து மகிழ்வார்கள். எந்த இன்பமும் வேண்டாம் என்று துறக்கும் துறவிகள் மேல் உலகத்துக்கு உரியவர்கள்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபதாம் பாடல்
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்
இப்பாடலின் பொருள்:
சூரியனும் சந்திரனும் இரு சுடர்களாக நிரந்தரமாக ஒளி வீசும்.. உலகில் எப்போதும் துன்பங்கள் இருக்கும். வேலைகளும் நடக்கும். அள்ளிக் கொடுத்து உதவும் செல்வர், உதவி பெற்று வாழும் ஏழைகள் என இரு பிரிவுகள் தொடர்ந்து உலக சமூகத்தில் நிலவும். மனிதர் பிறப்பதும் இறப்பதும் தொடர்ந்து நிகழும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்தோராம் பாடல்
இனிதுண்பான் என்பான் உயிர்கொல்லாதுண்பான்
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனியன் எனப்படுவான் செய்த நன்றில்லான்
இனியன் எனப்படுவான் யார்யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன்
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல உணவு என்பது எந்த உயிரையும் கொல்லாத சைவ உணவுதான். வெறுப்புக்குரியவர் யார் என்றால் அது எவரிடமும் நட்புக்கொள்ள விரும்பாத கோபக்காரர்தான். யாருக்கும் எந்த நன்மையும் செய்யாத மனிதன், தனியாக ஒதுக்கப்பட வேண்டியவன். எவரிடமும் கோபம் காட்டாத மனிதன்தான் இனியவன் ஆவான்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்திரண்டாம் பாடல்
ஈத்துண்பான் என்பான் இசைநடுவான் மற்றவன்
கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியாதானை இரவு
இந்தப் பாடலின் பொருள்:
மற்றவர்களுக்கு கொடுத்தபின் தான் உணவு உண்ணும் கருணையாளரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும். மற்றவர் கையில் உள்ளதைப் பறித்து வாழ்பவன் கேவலமானவன். தன்னை மதிக்காதவரிடம் சென்று கெஞ்சிக் கொண்டு வாழ்வது பிறர் பார்த்து சிரிக்கும் நிலையை உண்டாக்கும். தகுதியில்லாதவரிடம் உதவி கேட்பது பகைமைக்கு வழிவிடும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து மூன்றாம் பாடல்
நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து
வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து
கன்றூட்ட நந்தும் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து
இந்தப் பாடலின் பொருள்:
எரியும் நெருப்பில் நெய் ஊற்றினால் அது இன்னும் அதிகமாக கொழுந்து விட்டெரியும். இருக்கும் வாழ்வுக்கு நன்றி கூறி கடவுளை வணங்கி வந்தால் வரங்கள் பெற்று வாழ்வில் உயரலாம். கன்றுக்குட்டியை அருகில் விட்டால் பசு, இன்னும் அதிகம் பால் கறக்கும். உற்றார் உறவினர்களுக்கு விருந்து வைத்துப் போற்றினால் அன்பு இன்னும் அதிகம் பெருகும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து நாலாம் பாடல்
பழியின்மை மக்களால் காண்க ஒருவன்
கெழியின்மை கேட்டால் அறிக பொருளின்
நிகழ்ச்சியால் ஆக்கமறிக புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப்படும்
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவருக்கு நல்ல பிள்ளைகள் பிறக்கின்றனர் என்றால் அவர் ஏதோ புண்ணியம் செய்துள்ளார் என்று பொருள். பணம் இல்லாதபோது விலகிப் போகும் நண்பர்கள், உண்மையில் என்றுமே நட்பு கொண்டதில்லை என்று அர்த்தம். நாம் செய்யும் வேலையால் நமக்கு வருமானம் வந்தால்தான் அது பயனுள்ள வேலையாகும். உண்மையான புகழ் எப்போது தோன்றுகிறதென்றால் பகைவரும் தம் பகைமையை மறந்து பாராட்டும்போதுதான்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஐந்தாம் பாடல்
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் - பெண்ணின்
உருவின்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதியுள - பாட்டுள்ளும்
பாடெய்தும் பாடல் உள
இந்தப் பாடலின் பொருள்:
எல்லா மனிதருக்கும் கண்ணிருக்கலாம். ஆனால் சிலரின் கண்கள் மட்டும் மிகக் கருணையானவை. பெண்கள், உருவத்தில் ஆணை விடச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலரின் உள்ளம் மிக உயர்ந்தது. நாட்டில் பல இடங்கள் இருந்தாலும் சில தலங்கள் மட்டும் மிகப் பெருமைக்குரியனவாக விளங்குகின்றன. பாடல்கள் பல ஒலித்தாலும் சில மட்டும் மிகப் புகழ் பெறுகின்றன.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஆறாம் பாடல்
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப - ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு
இந்தப் பாடலின் பொருள்:
விளக்கில் உள்ள நெருப்பு சிறிதாக எரிந்தாலும் அதை மதிப்புடன் பார்த்து வணங்குவார்கள். ஆனால் அதே நெருப்பு பெரிதாக அடுப்பு விறகில் எரியும்போது யாரும் மதிப்பதில்லை. அதுபோல ஒரு சமூகத்தில் வயதில் மூத்தவராக இருந்தாலும் அவர் படிக்காவிட்டால் யாரும் மதிக்கமாட்டார். மாறாக மிக இள வயதாக இருந்தாலும் படித்தவர் என்றால் தனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
நான்மணிக்கடிகை நூலின் அறுபத்து ஏழாம் பாடல்
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகின் கெடும்
இந்தப் பாடலின் பொருள்:
கையில் பணம் இருந்தால் விரும்பியதைப் பெற முடியும். போதிய நீர் கிடைத்தால் விதையிலிருந்து பயிர்கள் முளைத்தெழும். திருமகள் அருள் இருந்தால் செல்வ வளம் தானே பெருகும். அருள் இல்லையென்றால் உள்ள செல்வமும் கரையும்.
நான்மணிக் கடிகை நூலின் அறுபத்தெட்டாம் பாடல்
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்
அரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல்.
இந்தப் பாடலின் பொருள்:
புலி, மாமிச உணவை உண்டு, தன் உடல் நிறத்தைப் பொலிவுறச் செய்கிறது. பசுக்கூட்டம் ஈரமான நிலத்தில் விளையும் புல்லை மேய்ந்து மகிழ்கிறது. கீழ் மக்கள், வெறும் அரிசிச் சோற்றை தின்பதுடன் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். ஆனால் மேன்மக்கள் தம் தகுதிக்கேற்ற சாதனை எதுவும் செய்தால்தான் மன நிறைவு அடைவர்.
நான்மணிக் கடிகை நூலின் அறுபத்தொன்பதாம் பாடல்
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை.
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு காரியத்தின் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று முன்கூட்டியே யோசிக்காமல் விடுவது தவறு. எந்த நன்மையும், முன்கூட்டியே யோசிப்பவர்க்குதான் முதலில் கிட்டும். எவ்வளவு பயன் கிடைத்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்படுவதே மனித மனம். எந்த ஆசையும் இல்லாத துறவிகள் மேற்கொள்ளும் தவங்கள் சிறந்த பயன் தரும்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபதாம் பாடல்
கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையா தவர்.
இந்தப் பாடலின் பொருள்:
செல்வம் இருந்தும் அதை அனுபவிக்காமல் பதுக்கி வைப்பவரை விட, பணம் இல்லாமல் வறுமை வாழ்க்கை வாழ்பவரே மேல். சேர்த்து வைத்த பணத்தை இழந்து வருந்துவதை விட பணம் இல்லாமல் வருந்துவதே மேல். கோபத்தோடு பிறரை திட்டுபவரை விட திட்டலைப் பொறுத்துக் கொள்பவர் சிறந்தவர். ஒரு நன்மையைச் செய்தவரை விட அந்த நன்மையை மறவாமல் இருப்பவர் இன்னும் உயர்ந்தவர்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபத்தோராம் பாடல்
மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்
புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
தந்தை தன் மகனை நல்ல விதமாக வளர்த்திருக்கிறார் என்பது அந்த மகனின் நடத்தையால் தெரிய வரும். ஒருவன் முகத்தைக் கொண்டே அவன் மனத்தில் உள்ள ஆசையை அறிய முடியும். நீர் நிறைந்த குளங்களின் தன்மையை அதில் வளர்ந்துள்ள தாவரங்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் கொண்டு அறியலாம். வயலில் இருந்து கிடைக்கவிருக்கும் விளைச்சல் அளவை வானில் இருந்து பொழியும் மழை அளவைக் கொண்டு அறியலாம்.
நான்மணிக் கடிகை நூலின் எழுபத்திரண்டாம் பாடல்
பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்தும் குடி.
இந்தப் பாடலின் பொருள்:
பலவித மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் அந்த ஊர் சிறப்படையும். ஐயம் எல்லாம் தெளிவாகும்படி ஆழ்ந்து படித்தால் ஒருவரின் மூளை வளர்ச்சியடையும். கூர் கொம்புகள் உடைய எருதுகள் சேரும்போது பசுக்கூட்டம் பாதுகாப்பும் பலமும் பெறும். ஒருவன் பிறருக்கு உணவளித்து உதவும்போது அவன் குடும்பத்துக்கு புண்ணியம் சேர்கிறது.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து மூன்றாம் பாடல்
ஊர்ந்தான் வகைய கலினமா - நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய அறஞ்செய்கை தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு
இந்தப் பாடலின் பொருள்:
குதிரைகள் அவற்றின் மீதமர்ந்து செலுத்தும் மனிதனின் போக்குக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். அறச்செயல்கள் செய்ய விரும்புவோரின் செயல்திறமைக்கு ஏற்றவாறு அந்த செயல்கள் விரைவாகவோ மெதுவாகவோ நடக்கும். நீர் நிறையும் தேக்கங்களின் பரப்பு, தோண்டிய நீர்நிலைகளின் அளவைப் பொறுத்து அமையும். குடும்பங்களின் செயல்பாடுகள் அவற்றின் பணவரவைப் பொறுத்து அமையும்.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து நாலாம் பாடல்
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை யானே நடந்தன - தாழியாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலால் இன்புறுவார்
இந்தப் பாடலின் பொருள்:
யுகங்களை ஆண்டுகளாகக் கணக்கிட்டனர் நம் முன்னோர். காலமும் நாழிகை அளவால் குறிக்கப்பட்டது. ஆயூள் காலத்தை வீணாக்காமல், அறிவுடையாரிடம் கேட்டறிந்து ஞானம் பெற்றனர் நல்ல மக்கள். அதைச் செய்யாமல் வீண் கொடுமைகளில் நேரத்தைப் போக்கியவர்க்கு வெட்கக் கேடுதான் மிஞ்சும்.
நான்மணிக்கடிகை நூலின் எழுபத்து ஐந்தாம் பாடல்
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யா வித்தாகி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
படித்தவன் ஏதாவது சிக்கல் வந்தால் அதிலிருந்து மீள வழி காண்பான். படிக்காதவன் தடுமாறி நிற்பான். ஒருவன் இந்தப் பிறவியில் செய்யும் காரியங்களின் விளைவுகள் அடுத்த பிறவியிலும் தொடரும். ஆழ்ந்து சிந்தித்தால் முற்பிறவிப் பலன் இப்பிறவியில் தொடர்வதை உணரலாம்.
நான்மணிக் கடிகை 76- ம் பாடல்
தேவ ரன்னர் புலவரும் தேவர்
தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாரைக் காத லவர்.
இந்தப் பாடலின் பொருள்:
அறிவைப் பரப்பும் புலவர்கள் தேவலோகத்து மனிதர் போல் உயர்ந்தவர்கள். புலவரின் ஊரில் வாழும் மக்கள் அவரை தங்கள் உறவினராகப் போற்றி மதித்து நடந்து அவரிடமிருந்து அருளும் கல்வியும் பெறலாம். அவ்வாறு செய்தால் தாங்களும் புலவர் போல் உயர்ந்த மனிதராகலாம்.
நான்மணிக் கடிகை - 77 ம் பாடல்
தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து.
இந்தப் பாடலின் பொருள்:
நண்பன் பொய் கூறினால் அந்த நட்பை உடனே முறித்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரவுள்ள மருத்துவர் கேட்டால் உடனே வலியையும் நோயையும் பற்றி அறிந்த விவரம் எல்லாம் தர வேண்டும். பெற்றோர் பெரியவர் ஆகியோர், ஒரு கெட்ட செயல் வேண்டாம் என்று அறிவுறுத்தினால் அதனை உடனே விட்டுவிட வேண்டும். சொத்துக்குரியவர் கேட்டால் உடனே அவர் பாகத்தை பங்கிட்டுத் தந்துவிட வேண்டும்.
நான்மணிக் கடிகை - 78 ம் பாடல்
நாக்கி னறிப இனியதை மூக்கினான்
மோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணினான் எண்ணப் படும்.
இந்தப் பாடலின் பொருள்:
உணவின் சுவையை அனுபவிக்க நாக்கு உதவுகிறது. மலர்களின் இனிய வாசனையை உணர மூக்கு உதவுகிறது. அழகிய காட்சிகளைக் காண கண் உதவுகிறது. வாழ்வுக்கு தேவையான கருத்துகளை உணர மூளையும் மனமும் உதவுகிறது.
நான்மணிக் கடிகை 79 - ஆம் பாடல்
சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
உலகில் பிறக்கும் உயிரெல்லாம் மறையக் கூடியவைதாம். வலிமை அல்லது பலம் எல்லாம் குறைந்து போகக் கூடியவைதாம். இளமை என்பதும் நிலையாக நீடிப்பதில்லை. செல்வ வளம் என்பது எப்போதும் நீடிக்கும் என்று உறுதியில்லை.
நான்மணிக் கடிகை 80 - ஆம் பாடல்
சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா.
இந்தப் பாடலின் பொருள்:
ஒருவரின் பேச்சைக் கொண்டு அவர் எவ்வளவு படித்தவர் என்று அறியலாம். ஒரு நீர்நிலையில் உள்ள தண்ணீரின் தன்மையை வைத்து அங்குள்ள மண்ணின் குணத்தை அறியலாம். ஒருவர் எந்த அளவு பொது நலத்தில் அக்கறை காட்டுகிறார் என்பதைக் கொண்டு அவரது பெருந்தன்மையை உணரலாம். ஒருவன் குடிகாரன் என்பதை அவனது தடுமாற்றத்தால் உணரலாம்.
நான்மணிக் கடிகை 81 - ஆம் பாடல்
நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு.
இந்தப் பாடலின் பொருள்:
குற்றம் கூறும் கெட்ட பேச்சால் நட்பு அழிந்து விடும். அறிவு தெளிவில்லாத மூடனை வற்புறுத்தி ஒரு பொறுப்பை ஏற்கச் சொன்னால் அவன் அதைப் பாதியில் கைவிட்டு விடுவான். பல நூல்கள் படித்து வாழ்வில் தெளிவு பெறுவோர்க்கு பேராசைகள் வராது. பகைமை உணர்வு நன்மையைத் தராது.
நான்மணிக் கடிகை 82 - ஆம் பாடல்
கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.
இந்தப் பாடலின் பொருள்:
உதவி செய்ய விரும்புவோர், பசியுள்ளவர்க்கு உணவு தந்து உதவலாம். எதையாவது விட விரும்புவோர் உயிர் மீதுள்ள பற்றை விடலாம். யாரையாவது உயர்த்திவிட வேண்டும் என நினைப்போர், தங்கள் உறவினருள் ஏழையானவரைத் தாங்கி உயர்த்தலாம். எதையாவது ஒழிக்க விரும்பினால் கோபம் எனும் குணத்தை ஒழித்து விடலாம்.
நான்மணிக் கடிகை 83 - ஆம் பாடல்
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.
இந்தப் பாடலின் பொருள்:
வறுமையில் வாழ்ந்தால் ஒருவரின் அழகும் இளமையும் வீணாகிவிடும். ஒரு குடும்பத்தின் பெருமையும் மதிப்பும் அக்குடும்பத்தினரிடம் கல்வி உள்ள வரைதான். படிப்பு இல்லாவிட்டால் மதிப்பு மறைந்துவிடும். தண்ணீரில்லாத வறட்சி ஏற்பட்டால் வயலில் பயிர் வளராமல் வாடிவிடும். எருதின்மேல் சுமையை அளவுக்கு மேல் ஏற்றினால், அதை சுமக்க முடியாமல் எருது இறந்துவிடும்.
நான்மணிக் கடிகை 84 - ஆம் பாடல்
நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்
கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்
துடையார்க்கும் எவ்வூரு மூர்.
இந்தப் பாடலின் பொருள்:
கல்வியறிவு அதிகமுள்ள அறிஞர்கள் எந்த ஊரிலும் உயர்ந்து விளங்குவார்கள். துறவிகளுக்கு சொந்த ஊர் என்று எதுவுமில்லை. எல்லா ஊரும் அவர்க்கு ஒன்றுதான். நாடோடி மக்கள் சொந்த ஊர் எதுவுமின்றி அலைவார்கள். பணம் அதிகம் வைத்துள்ள செல்வந்தர்களே எல்லா ஊரிலும் சொத்துக்கள் வாங்கி அதனை தம்மூர் என்பார்கள். ஆக மொத்தம், மக்கள் வாழ்வு ஓர் ஊரில் முடங்குவதில்லை.
நான்மணிக் கடிகை 85 - ஆம் பாடல்
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
இந்தப் பாடலின் பொருள்:பண்பும் படிப்பும் இல்லாதவருக்கு அவரது பேச்சே எமனாக வாய்க்கக்கூடும். மெல்லிய இலை கொண்ட வாழை மரத்துக்கு அதன் குலைதான் எமன். குலை ஈன்றதும் தாய் மரம் விழுந்துவிடும். பிறருக்கு தீமை செய்து மகிழ்வோருக்கு அறக் கடவுள் தண்டனை கொடுத்து அழிக்கும். வீட்டில் உள்ள மனைவி ஒழுக்கம் தவறினால் அவளது குடும்பத்தை அழிப்பவளாவாள்.
நான்மணிக் கடிகை 86 - ஆம் பாடல்
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
ஆடலாற் பாடு பெறும்.
இந்தப் பாடலின் பொருள்:
பயிர் விளையும் நிலத்திற்கு நல்ல விதமாக நீர் பாய்ச்சினால் நிலம் வளமடையும். கடலில் இருந்து கிடைக்கும் முத்து போன்றவற்றால் நகரத்தில் வர்த்தகம் வளரும். நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட்டால் நாட்டை ஆளும் மன்னருக்கும் பெருமை சேரும். கூத்து போன்றவற்றில் ஈடுபடுவோர் திறமையை வளர்த்துக்கொண்டு பாடி ஆடினால் கலை வளரும்.
நான்மணிக் கடிகை 87 - ஆம் பாடல்
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்.
இந்தப் பாடலின் பொருள்:
பெண்கள் குடும்ப ஒற்றுமையை ஊக்குவிக்கும் வண்ணம் உழைப்பது சிறப்பு. அம் தணர் எனும் அழகிய அருள் உள்ளம் கொண்ட துறவியர் இறை எண்ணம் மக்களிடையே பரவ உழைப்பது சிறப்பு. மற்ற நாட்டுடன் போர் புரியச் செல்லும் போது வீரர்களை ஒற்றுமையாக வழிநடத்தும் திறமை மன்னர்க்கு வேண்டும். உறவினர்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் அது அனைவருக்கும் கேடுதான்!
நான்மணிக் கடிகை 88 - ஆம் பாடல்
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.
இந்தப் பாடலின் பொருள்:
பிறர் பொருளைத் திருட முயன்றால் துன்பம்தான் வரும். எனவே அது கூடாது. நம் தகுதிக்குரிய வேலைகளையும் கடமையையும் செய்யாமல் இருக்கவும் கூடாது. ஒழுக்கமில்லாத மக்களுடன் சேர்ந்து பழகுவதும் கூடாது. எவரிடத்தும் பகை கொள்ளக் கூடாது.
நான்மணிக் கடிகை 89 - ஆம் பாடல்
பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம்.
இந்தப் பாடலின் பொருள்:
நண்பருக்கு உதவி செய்து அவரை வாழ்வில் உயர்த்திவிடுவது நல்லது. பகைவரை ஒடுக்குவதற்கு எற்ற காலம் வரும்வரை காத்திருந்து பின் எதிர்க்க வேண்டும். பிறரை நம்பி வாழும் நிலைமையை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
நான்மணிக் கடிகை 90 - ஆம் பாடல்
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு.
இந்தப் பாடலின் பொருள்:
சோம்பல் உள்ளவர்க்கு தாழ்வுதான் வரும். நல்ல ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதோருக்கு பிறரை துன்புறுத்தும் கெட்ட எண்ணங்கள் தோன்றும். நல்ல பெண்கள் தனக்குத் தானே பண்பாட்டு எல்லைகளை வகுத்து அதற்குள் நிற்பார்கள். யானை, நிலத்தில் அமைக்கப்படும் உறுதியான தூணுடன் சேர்ந்து நிற்கும்.
நான்மணிக் கடிகை 91 - ஆம் பாடல்
மறையறிய அந்தண் புலவர் முறையொடு
வென்றி அறிப அரசர்கள் - என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண்.
இந்தப் பாடலின் பொருள்:
அருள் உள்ளம் கொண்ட புலவர்கள் மறைநூல்களைப் படித்து ஆராய்வார்கள். நல்ல அரசர்கள், மக்களுக்கு பகையரசரால் துன்பம் வராமல் பாதுகாக்க வழிவகைகளை ஆராய்வார்கள். ஞானிகள் எப்போதும் கர்வமின்றி பணிவாக இருப்பார்கள். நல்ல பெண்கள் தெய்வத்தை வணங்குவதை விடவும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதையே முக்கியமாக கருதுவர்.
நான்மணிக் கடிகை 92 - ஆம் பாடல்
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல் நிற்குங் கொலை.
இந்தப் பாடலின் பொருள்:
நல்ல பண்புள்ள பெண்கள் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கமாக வாழ்வார்கள். கற்பில்லாத பெண் எவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் கெட்டுப் போவாள். மனதில் காதல் ஏற்பட்டால் அதன் விளைவைத் தடுக்க இயலாது. கொலை செய்தவர் அந்தப் பழியிலிருந்து தப்பிக்க முடியாது.
நான்மணிக் கடிகை 93 - ஆம் பாடல்
வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்
கயம்பெருகின் பாவம் பெரிது.
இந்தப் பாடலின் பொருள்:
மனத்தில் துணிவு அதிகரித்தால் உடல் பலமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி கனிவான பழக்கம் கொண்டிருந்தால் உறவினரின் அன்பும் நட்பும் பெருகும். உள்ளத்தில் கருணை வளர்ந்தால் தர்மச் செயல்கள் நிறைய செயத் தோன்றும். மனதில் கெட்ட எண்ணங்கள் மிகுந்தால் பாவம் வந்து சேரும்.
நான்மணிக் கடிகை 94 - ஆம் பாடல்
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார் கையகத் தூண்.
இந்தப் பாடலின் பொருள்:
இளவயதில் கல்வி பயிலாதிருப்பது குற்றமாகும். கையில் பணமில்லாதபோது தானம் செய்ய முயல்வது தவறு. தம் பக்கம் ஆதரவுக்கு உறவினர் இல்லாதபோது கோபத்தைக் காட்டுவது தவறு. நம்மிடம் உள்ளன்பு இல்லாதவரிடம் உணவு பெற்று உண்பது தவறு.
நான்மணிக் கடிகை 95 - ஆம் பாடல்
எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா வளர விடல்தீது - நல்லார்
நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை.
இந்தப் பாடலின் பொருள்:
உயிரைக் கொல்வது எப்போதுமே பாவம்தான். வேள்வி போன்றவற்றில் ஆடு, மாடு கொல்வதும் கூட குற்றமே. பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் சும்மா வளரவிடுவதும் குற்றம். மான அவமானம் பார்க்காமல் வாழ்வது குடும்பத்துக்கு நல்லதில்லை. சிறந்த கொள்கைகளைக் கைவிட்டு மாறிப் போவது குலத்துக்கு நல்லதில்லை.
நான்மணிக் கடிகை 96 - ஆம் பாடல்
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
நல்லொழுக்கம் தான் நாம் கற்கும் கல்வியின் பயனாகும். தர்ம காரியம் செய்து கொண்டே வசதிகளை அனுபவிப்பதுதான் செல்வம் சேர்ப்பதன் பயனாகும். யாருக்கும் சலுகை காட்டாமல் நடப்பதுதான் நீதித் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்க்கு முறையாகும். அரசன், அமைச்சர்களுடன் ஆராய்ந்து, தன் சொந்த விருப்பங்களை ஒதுக்கி விட்டு முடிவெடுப்பதே சிறப்பு.
நான்மணிக் கடிகை 97 - ஆம் பாடல்
கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
கள் குடிப்பதன் தீங்கு என்ன என்பதை அதைக் குடித்தவன் அறிந்துகொள்வான். நெடுந்தூரம் பறக்கும் பறவை, தண்ணீர் கிடைக்காத துன்பத்தை உணர்ந்து கொள்ளும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்பவன் குடும்பத்தை நடத்த முடியாமல் துன்பப்படுவான். பொருள்களைக் களவாடும் திருடன், அவற்றை மறைத்து வைக்க முடியாமல் அவதியுறுவான்.
நான்மணிக் கடிகை 98 - ஆம் பாடல்
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
அன்பில்லாதவர் கடுமையான சொற்களைப் பேசி புண்படுத்துவார். நீதி நூல்களைப் படித்தவர் எந்த சூழ்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வஞ்சனைப் பேச்சு பேசமாட்டார். நல்லவர்கள் பொய் வதந்திகளை பரப்ப மாட்டார்கள். தாழ்ந்த குணம் கொண்டவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்கள்.
நான்மணிக் கடிகை 99 - ஆம் பாடல்
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.
இந்தப் பாடலின் பொருள்:
ஒளிவீசும் நகையணிந்த அழகிய மங்கையர் கூட்டத்தில் அழகில்லா ஆணுக்கு மதிப்பு கிடைக்காது. படித்தவர்கள் கூடியுள்ள சபையில் படிக்காத மனிதனுக்கு மதிப்பிருக்காது. அதேபோல, கல்வியறிவு இல்லாத மூடர்களின் கூட்டம் நிறைந்திருக்கும் இடத்தில் படித்த மனிதனுக்கு மரியாதை கிட்டாது.
நான்மணிக் கடிகை 100 - ஆம் பாடல்
மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
நவரத்தினக் கல்லில் அழுக்கு படிந்தாலும் அதன் பெருமை குறையாது. இரும்பை நன்றாக கழுவி வைத்தாலும் அதில் துரு பிடிக்கும். இயல்பான குணம் என்றும் மாறாது! கெட்ட புத்தி கொண்டவனை விலங்கிட்டு தண்டித்தாலும் அறிவுரை கூறி அன்பு காட்டினாலும் அவன் திருந்தமாட்டான்.
நான்மணிக் கடிகை 101 - ஆம் பாடல்
எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.
இந்தப் பாடலின் பொருள்:
உயர்ந்த மனிதர்களுடன் சேர்ந்து பழகும் பழக்கம் அறிவு வளர்ச்சிக்கு உதவும் கல்வி போன்றது. நம்மை மதிக்காதவருடன் சேர்ந்து வாழ்வது புண் போல துன்பமானது. நல்ல நண்பர்களின் அறிவுரை யாழிசை போல் இனிமையானது. சிறப்பான மனைவி இல்லாத வீடு பாழடைந்த மனை போல் வெறுமையானது.
நான்மணிக் கடிகை 102 - ஆம் பாடல்
ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை.
இந்தப் பாடலின் பொருள்:
குளம் சிறிதாக இருந்தால் அதில் சேரும் மழைநீர் வழிந்து வீணாகி விடும். குடும்பத்தில் போதுமான வருமானம் இல்லையென்றால் குடும்பத் தலைவியின் மகிழ்ச்சி போய்விடும். முன்பிறவியில் செய்த புண்ணியம் குறைவென்றால் இப்பிறவி வாழ்வில் துன்பம் இருக்கும். ஒருவருக்கு மனத்தில் பலம் இல்லாதபோது அவரது பகைவர்கள் வென்றுவிடுவர்.
நான்மணிக் கடிகை 103 - ஆம் பாடல்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.
இந்தப் பாடலின் பொருள்:
பிறரைத் திட்டிப் பேசுவதால் மன வருத்தங்கள் தோன்றும். எல்லாரிடமும் வணங்கி பணிவோடு நடந்தால், உறவு வட்டம் பெருகும். உழைத்து நிறைய செல்வம் சேர்த்தால் இன்ப வாழ்வு கிட்டும். மனம் நெகிழ்ந்து பிறருக்கு உதவிகள் செய்தால் புண்ணியம் சேரும்.
நான்மணிக் கடிகை 104 - ஆம் பாடல்
ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல்.
இந்தப் பாடலின் பொருள்:
எல்லாக் கலைகளும் கற்றவர் என்று ஒருவர் கிடையாது. ஒரு திறமையும் இல்லாதவன் என்று வெறுமையான மனிதரும் கிடையாது. குற்றமே இல்லாத முழு குணம் உள்ளவரும் இல்லை; எல்லாம் அறிந்த முழு அறிவாளியும் இல்லை.
நான்மணிக் கடிகை 105 - ஆம் பாடல்
மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு.
இந்தப் பாடலின் பொருள்:
ஒரு குடும்பத்துக்கு வழிகாட்டும் விளக்கு போன்றவர்கள் குடும்பத் தலைவியரான பெண்கள். அவர்களின் உள்ளத்துக்கு ஒளியாக விளங்குவோர் குழந்தைகள். அந்தக் குழ்ந்தைகளின் வாழ்வில் ஒளி உண்டாக்குவது கல்விதான். அந்தக் கல்விச் செல்வம் ஒளி வீச பக்தி உணர்வே உதவும்.
நான்மணிக் கடிகை 106 - ஆம் பாடல்
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.
இந்தப் பாடலின் பொருள்:
இனிமையாகப் பேசும் பழக்கம் இருந்தால் நட்பு உருவாகும். கடுமையாக வன்சொல் பேச்சு பேசினால் பகை உண்டாகும். பிறருக்கு நம்பிக்கை தரும்படி நல்லனவற்றைக் கூறும் பழக்கத்தால் அருள் குணம் அதிகரிக்கும். மனத்தில் அருளை வளர்த்துக் கொண்டால், மரணத்துக்குப் பின் அழிவிலா வீடுபேறு அடையலாம்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் புலவர் விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை நூலின் மூலமும் விளக்கமும் முற்றிற்று.
விளக்கவுரை: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர் தமிழ் வானொலி ஒலி 96.8
Information on Tamil culture and Divine Knowledge. By Meenatchi Sabapathy, Tamil Teacher, Ex Senior Broadcaster of Singapore's National Tamil Radio Station, Mediacorp -Oli96.8 FM, Writer and Speaker
Thursday, August 14, 2008
Subscribe to:
Posts (Atom)
சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் (அதிகாரம்: கடவுள் வாழ்த்து குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...
-
மதமாற்றிகளுடன் உரையாடல். ( மீனாட்சி சபாபதி , சிங்கப்பூர்) கடந்த ஐம்பது ஆண்டுகளில் நான் சந்தித்த தமிழ் பேசும் கிறி...
-
My books: 1) Simple Tamil year: 1986publisher: Europhone 2)Arivoma Naam year: 1995publisher: Mediacorp Radio 3) Namathu Panpaattai Ari...
-
அண்மையில் Quora தளத்தில் பின்வரும் உரையாடலைப் படித்தேன். பீட்டர் ஃபெர்னாண்டஸ் Bharathiar University -இல் எம்சிஏ (MCA) படித்தார் எழுத்தா...